திருவள்ளூர் மாவட்டத்தில் 482 விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
திருவள்ளூர்: விநாயகர் சதுர்த்திக்காக, திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்டிருந்த, 1,110 சிலைகளில், முதல் நாளான நேற்று, 482 சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த 5ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. மாவட்டம் முழுவதும், 1,110 சிலைகள் வைக்கப்பட்டன. சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதில், திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் இருந்து, 49 விநாயகர் சிலைகள், ஊர்வலமாக புறப்பட்டன. ஜே.என்.சாலை, பஜார் வீதி வழியாக, காக்களூர் ஏரியில் கரைக்கப்பட்டன. இதற்காக ஏ.டி.எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில், டி.எஸ்.பி., விஜயகுமார் உட்பட, 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி உட்கோட்டங்களில், வைக்கப்பட்டிருந்த சிலைகள் என, மொத்தம், 482 சிலைகள் நேற்று கரைக்கப்பட்டன. மீதமுள்ள சிலைகள், வரும் 11ம் தேதி வரை, மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட, 16 நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.