காஞ்சிபுரம் மாவட்டத்தில் 750 விநாயகர் சிலைகள் கரைப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், நேற்று, 750 விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்த வரையில், இந்து அமைப்பினரும், பொதுமக்களும் சேர்ந்து, 1,625 விநாயகர் சிலைகள், பொது இடங்களில் வைத்து வழிபட்டனர். விநாயகர் சதுர்த்தியின் மூன்றாம் நாள் முதல், 11ம் தேதி, வரை நீர் நிலைகளில், விநாயகர் சிலைகளை கரைக்க, இந்து அமைப்பினர் முடிவு செய்துள்ளனர். மூன்றாம் நாளான நேற்று, மாவட்டம் முழுவதும், பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. பொன்னேரி ஏரி, மதுராந்தகம் ஏரி, தழுதாளிக்குப்பம், கடப்பாக்கம், மாமல்லபுரம், சதுரங்கப்பட்டினம், கடலுார்குப்பம், பரமன்கேனிகுப்பம், வடபட்டினம், கோவளம், பாலவாக்கம், நீலாங்கரை ஆகிய கடல் பகுதி என, 12 இடங்களில், விநாயகர் சிலைகளை கரைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியிருந்தது. இந்த நீர் நிலைகளில், நேற்று இரவு, 7:00 மணி நிலவரப்படி, 750 விநாயகர் சிலைகள் பக்தர்களால் கரைக்கப்பட்டன. நீரில் கரைப்பதற்கு முன், லாரி, வேன், சரக்கு ரக வாகனம், மாட்டு வண்டி என பல்வேறு வாகனங்களில், அலங்காரத்துடன், வரிசையாக விநாயகர் சிலைகள் கொண்டு வரப்பட்டன. நீர்நிலை அருகே,சிலைகள் இறக்கப்பட்டு, கற்பூரம் ஏற்றி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின், நீர்நிலைகளில், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் பாதுகாப்பிற்கு, 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். - நமது நிருபர் குழு -