உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல் மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலம்

திண்டுக்கல், திண்டுக்கல்லில் சிவசேனா கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. மாநில இளைஞரணி தலைவர் சி.கே.பாலாஜி, மாவட்ட தலைவர் அசோக்பாபு உட்பட பலர் பங்கேற்றனர். 22 சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. ஊர்வலம் திண்டுக்கல் மெயின்ரோடு, மாரியம்மன் கோயில் வழியாக கோட்டை குளத்தை அடைந்தது. அங்கு கரைக்கப்பட்டது. ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம், ரெட்டியார் சத்திரம் பகுதிகளில் இந்துமக்கள் கட்சி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 20 விநாயகர் சிலைகள், செக்போஸ்ட்டிற்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் நகரின் முக்கிய பகுதிகளில் சென்று, விருப்பாட்சி தலையூற்றில் கரைக்கப்பட்டன. மாவட்ட தலைவர் வெங்கடேஷ், இளைஞரணி தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தனர். வர்த்தக அணி தலைவர் கணேசன், மாவட்ட துணை தலைவர்கள் மனோஜ்குமார், சதீஸ்குமார், அமைப்பாளர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

பஸ்ஸ்டாண்ட் முன்பு நடந்த கூட்டத்தில் மாநில பொது செயலாளர் ரவிக்குமார், செயலாளர் ரவிபாலன், இளைஞரணி துணை செயலாளர் குமரன் பேசினர். நேற்று முன்தினம் ஒட்டன்சத்திரம், அம்பிளிக்கை, சத்திரப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 59 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. நேற்று மாலை இந்த சிலைகள் ஒட்டன்சத்திரம் செக்போஸ்ட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு ஊர்வலம் துவங்கியது. இந்து முன்னணி ஒன்றிய தலைவர் முத்துராமலிங்கம், பொது செயலாளர் ரகுபதி கலந்து கொண்டனர். சிலைகள் விருப்பாட்சி தலையூற்றில் கரைக்கப்பட்டது. டி.எஸ்.பி., ராஜா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒட்டன்சத்திரம் தாசில்தார் மாரியப்பன் தலைமையிலான வருவாய்துறையினரும் ஊர்வலத்தை கண்காணித்தனர்.

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் விநாயகர் ஊர்வலம் நடந்தது. ராமகிரி, குஜிலியம்பாறை, பொம்மாநாயக்கன்பட்டி, கோட்டநத்தம், கூடலுார், லந்தகோட்டை உள்ளிட்ட 23 குக்கிராமங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள், வாகனங்கள் மூலம் குஜிலியம்பாறை கொண்டுவரப்பட்டு, ஊர்வலம் துவங்கியது. பங்களாமேடு சென்று நீரில் சிலைகள் கரைக்கப்பட்டன. டி.எஸ்.பி., மோகன்குமார் தலைமையிலான போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

வடமதுரை: வடமதுரை ஒன்றியத்தின் பல பகுதிகளிலும் பா.ஜ., இந்து முன்னணி மற்றும் பொதுமக்கள் சார்பில் சதுர்த்தி விழாவிற்காக 46 விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அய்யலுார் பகுதி சிலைகள் அனைத்தும் தீத்தாகிழவனுார் பேசும் பழனியாண்டவர் கோயிலில் துவங்கி கடைவீதியில் ஊர்வலம் சென்றனர். பின்னர் நரிப்பாறை குளத்தில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்திற்கு பா.ஜ., பொதுக்குழு உறுப்பினர் வி.கே.ராமசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சுந்தர்ராஜன், ஒன்றிய தலைவர் கே.ராமசாமி, நகர தலைவர் சண்முகம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !