காரைக்காலில் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
காரைக்கால்: காரைக்காலில் பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன. இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள ஏழை மாரியம்மன் கோவில், நேரு நகர், மதகடி உள்ளிட்ட 47 இடங்களில் கடந்த 5ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மூன்று நாட்களுக்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, நேற்று சிலைகளை விஜர்சனம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி, மாவட் டம் முழுவதும் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று காலை புதிய பஸ்நிறுத்தம் அருகே உள்ள ஏழைமாரியம்மன் கோவில் முன் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு, பூஜை செய்யப்பட்டது. அமைப்பாளர் விஜயன் தலைமையில் சிலை ஊர்வலம் புறப்பட்டது. பா.ஜ., மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விநாயகர் சிலைகள் கிளிஞ்சல்மேடு பகுதி கடலில் கரைக்கப்பட்டன. எஸ்.பி., குணசேகரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.