உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி அன்னை ஆலயத்தில் மூன்று மொழிகளில் திருப்பலி!

கன்னியாகுமரி அன்னை ஆலயத்தில் மூன்று மொழிகளில் திருப்பலி!

கன்னியாகுமரி : திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தில் மூன்று மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. இது குறித்து ஆலய பங்கு தந்தை லியோன் கென்சன் கூறியதாவது: திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தில வரும் காலங்களில் வழிபாட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் மூன்று தமிழ் திருப்பலி மட்டுமே நிறைவேற்றப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் இனி தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஐந்து திருப்பலி நிறைவேற்றப்படும். வார நாட்களில் இதுவரை ஒரு திருப்பலி மட்டுமே நிறைவேற்றப்பட்டு வந்து. இந்நிலையில் ஆலயத்தை திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி நாள்தோறும் இரண்டு திருப்பலி நிறைவேற்றப்படும். இது தவிர புதன், விழாயன் இரு தினங்களும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்படும். சனிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு மாதா நவநாள் திருப்பலி நிறைவேற்றப்படும். மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, 7 முதல் 8 மணிவரை ஒரு மணி நேரம் ஆராதனையும் நடக்கிறது. மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட பழைய கோயிலில் திருப்பலி நடக்கும். அதைப்போல் எல்லா மாதமும் முதல் சனிக்கிழமை காலை 5 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட பழைய கோயிலில் திருப்பலி நடக்கும். திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருவதாலும் திருப்பயணிகள் தங்கவும், வழிபாடு நடத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !