பிரதாப வீர ஆஞ்சநேயருக்கு தேங்காய் துருவல் அபிஷேகம்
தஞ்சாவூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு தஞ்சை மேலவீதி ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் துருவல் அபிஷேகம், 1008 எலுமிச்சம் பழங்கள் அடங்கிய மாலை சாற்றி வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. தஞ்சை மேலவீதியில் ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில் உள்ளது. மூலை அனுமாருடைய இதய கமலத்தில் ராமன்பிரான் வாசம் செய்வதால் இக்கோவிலில் ராமபிரானுக்கு தனி சன்னதி இல்லை. மூலை அனுமாரை வழிபட்டால் ராமருடைய பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலை 18 முறை மவுனமாக வலம் வருவதும், 18 நிமிடம் மவுனமாக தியானம் செய்வதும் சிறப்பாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், அலங்கார சேவைகள் நடந்தது. காலை 7.30 மணிக்கு லட்ச ராமநாம ஜெபத்துடன் சிறப்பு வழிபாடு துவங்கியது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதை தொடர்ந்து கடன் தொல்லைகளை நிவர்த்தி செய்யும் தேங்காய் துருவல் அபிஷேகமும் நடந்தது. மாலையில் கனிகளால் சிறப்பு அலங்கார சேவை நடந்தது. பின்னர் 1008 எலுமிச்சம் பழங்கள் அடங்கிய மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், அமாவாசை வழிபாட்டுக்குழுவினர், மூலை அனுமார் சேவா சமிதியினர், கலந்து கொண்டனர்.