எட்டு ஆண்டுகளுக்கு முன் பூட்டப்பட்ட கோவில் திறப்பு
திருக்கோவிலுார்: நெற்குணம் கிராமத்தில், கடந்த எட்டு ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த மாரியம்மன் கோவில், வழிபாட்டுக்காக திறக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அடுத்த நெற்குணம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில், எட்டு ஆண்டுகளுக்கு முன், திருவிழா நடத்துவது தொடர்பாக, ஒரே பிரிவை சேர்ந்த இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, கோவில் பூட்டப்பட்டது.
இந்த ஆண்டு கோவில் திருவிழா நடத்த கிராம மக்கள் முயற்சி மேற்கொண்டனர். இதற்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருவாய், காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், பேச்சுவார்த்தை நடத்தியும் தீர்வும் எட்டப்பட்டவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம பெண்கள் ஒன்று திரண்டு, கோவிலை திறந்து பூஜை செய்யப்போவதாக அறிவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. நேற்றுமுன்தினம் ஆர்.டி.ஓ., செந்தாமரை தலைமையில், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கிராமமக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். டி.எஸ்.பி., கீதா, கண்டாச்சிபுரம் தாசில்தார் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பொது மக்கள் வழிபாட்டிற்காக கோவிலை திறப்பது என அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து, நேற்று காலை 10:30 மணிக்கு டி.எஸ்.பி., தாசில்தார் முன்னிலையில் கோவில் பூட்டு திறக்கப்பட்டது. கிராம மக்கள் தென் பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துவந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். காசி குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மூலஸ்தான அம்மனுக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் பூட்டப்பட்ட கோவில் திறக்கப்பட்டு, வழிபாட்டிற்கு அனுமதிக்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.