பல்லவர் கால கிரந்த எழுத்துக்கள் மகேந்திரவாடியில் கண்டுபிடிப்பு
சென்னை: அரக்கோணம் அருகே உள்ள மகேந்திரவாடியில், பல்லவர் காலத்தைச் சேர்ந்த, கிரந்த எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அரக்கோணம் ஒன்றியம், மகேந்திரவாடியில் உள்ள பல்லவர் கால குடைவரை கோவிலை ஆய்வு செய்த, தொல்லியல் ஆய்வாளர் தீபிகா, அங்கு, கி.பி., 7ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, பல்லவர் கால கிரந்த எழுத்துக்களை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து, தீபிகா கூறியதாவது: நான், பல்லவர் சிற்பங்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து வருகிறேன். சமீபத்தில், பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்தில் இருந்து, 65 கி.மீ., தொலைவில், மகேந்திரவாடியில் உள்ள, முதலாம் மகேந்திர வர்மனின், விஷ்ணு குடைவரை கோவிலை ஆய்வு செய்தேன். அங்கு, மகேந்திர விஷ்ணுகிரிகம் உள்ளிட்ட கிரந்த எழுத்துக்கள் உள்ளதை, 1896ல் கண்டுபிடித்து ஆவணப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், குடைவரை கோவிலின் வடக்கில் உள்ள பாறையில், நான் ஆய்வு செய்த போது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த, நீ என்ற கிரந்த எழுத்தைக் காண முடிந்தது. அது குறித்து, என் ஆசிரியரும், தமிழக முன்னாள் தொல்லியல் கண்காணிப்பாளருமான வசந்தியிடம் கூறினேன். அவரும், அது குறித்த பதிவுகள் ஏதும், இதுவரை இல்லை என, உறுதி செய்தார். பின், எழுத்துக்கள் இருந்த பாறையில், சிறிது நீர் ஊற்றி ஆராய்ந்த போது, மேலும், சில எழுத்துக்களைக் காண முடிந்தது. தொடர்ந்து, எஸ்டெம்பேஜஸ் முறையில் நகல் எடுத்த போது, 7, 6 என்ற எண்ணிக்கையில், இரண்டு வரிகளில், அவநீதசித்தன் என, எழுதப்பட்டு இருந்தது. அது, முதலாம் மகேந்திர வர்மனின் பட்டப்பெயர்களில் ஒன்றாக இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.