உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி பெருமாள் கோவில் கொடிமரம் சேதம்: பக்தர்கள் அதிருப்தி

திருத்தணி பெருமாள் கோவில் கொடிமரம் சேதம்: பக்தர்கள் அதிருப்தி

திருத்தணி : திருத்தணி விஜயராகவ பெருமாள் கோவிலில், கொடிமரம் சேதம் அடைந்தும், அகற்றப்படாததால் பக்தர்கள் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான கோட்ட ஆறுமுக சுவாமி கோவில், நந்தி ஆற்றின் கரையோரம் உள்ளது. இக்கோவில் வளாகத்தில், ஆறுமுக சுவாமி, விஜயராகவ பெருமாள் மற்றும் விஜயலட்சுமி தாயார் ஆகிய மூன்று கோவில்கள் தனித்தனியாக உள்ளன. இந்த கோவில்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக விஜயராகவ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் முழுவதும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வர்.

இதுதவிர, புரட்டாசியில் வரும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாளை வழிபட்டு, பிரசாதங்கள் வினியோகம் செய்வர். இந்நிலையில், விஜயராகவ பெருமாள் கோவிலின் முன் அமைக்கப்பட்ட கொடி மரம் சேதம் அடைந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்று வரை கோவில் நிர்வாகம் அகற்றி புதிய கொடிமரம் நடுவதற்கு எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. இதுதவிர, மூலவர் சன்னிதி மற்றும் கோவிலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டால், பெருமாளை தரிசிக்க முடியாது. காரணம், இன்வெர்ட்டர் வசதியில்லாததால், விளக்குகள் எரிவதில்லை. ஒவ்வொரு மாதமும் மின்வாரிய துறையினர் பராமரிப்பு பணிகள் காலை, 9:00 மணி முதல் மாலை, 5:00 மணி மின்சாரம் இல்லாததால், பக்தர்கள் பெருமாளை வழிபட சிரமப்படுகின்றனர். எனவே, கோவிலின் கொடி மரத்தை மாற்றியும், விளக்குகள் எரிவதற்கு இன்வெர்ட்டரும் அமைத்து தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !