கல் எறிந்து வழிபட்ட பக்தருக்கு இறைவன் காட்சி கொடுத்த தலம்!
காஞ்சிபுரம்: இறைவனை பல வகையான மலர்களாலும், பாடியும் வழிபாடு செய்த கோவிலை பார்த்திருக்கிறோம். ஆனால் கல்லால் எறிந்து பூஜை செய்த பக்தருக்கு இறைவன் அருள்புரிந்ததலம் காஞ்சிபுரத்தில் உள்ளது. உண்மையான பக்திக்கு இறையருள் கிடைக்கும் என்பதற்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன . நாயன்மார்கள், சைவ குரவர்கள் வழிபட்டதலங்கள் காஞ்சிபுரத்தில் உள்ளன . இரண்டாம் பரமேஸ்வர பல்லவன் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. 1,000 ஆண்டுகள் பழமையான கோவிலாக கருதப்படுகிறது. ஆரம்பத்தில் மூலவர்சன்னிதி, மண்டபம் அமை ந்திருந்தது. காலப்போக்கில் இடிந்து விட்டன.
1921ம் ஆண்டு தொல்லியல் துறையினர் ஆராய்ச்சி செய்த பின் இக்கோவில் புராணத்தை அறியமுடிந்தது. அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சாக்கிய நாயனார், காஞ்சி நகரில் அமைந்துள்ள வீரட்டானேஸ்வரரை வழிபட்ட விதமே வித்தியாசமாக இருக்கிறது. புத்த மதத்தை சேர்ந்தவராக கூறப்படும் சாக்கிய நாயனார், சைவம் மீது கொண்ட பற்றால் சிவனை வழிபட ஆரம்பித்தார். பக்தியால் ஒரு கல்லை எடுத்து வை த்து, அதுவே லிங்கமாக நினைத்து வழிபட விரும்பினார். ஆனால், பூஜை செய்வதற்கு அப்பகுதியில் மலர் கிடைக்க வில்லை. அதனால் கீழே கிடந்த சிறுகற்களை எடுத்து அதை மலர்களாக நினைத்து, வீசி எறிந்து பூஜை செய்து வந்தார். ஒரு நாள் பூஜை செய்ய மறந்து சாப்பிட அமர்ந்து விட்டார். அப்போது நினைவு வந்து கற்களை எடுத்து வழக்கம் போல் பூஜை செய்ய முற்பட்ட போது, இறைவன் தடுத்து அவருக்கு காட்சி கொடுத்தார். அவர் பூஜை செய்த லிங்கத்தில் கல் எறிந்த தழும்பு காணப்படும். அதன் பின் பிற்காலத்தில் புதிய லிங்கம் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. மூலவர் சன்னிதி எதிரில் சாக்கியநாயனார் சிலை உள்ளது. சிதிலம் அடைந்த இந்த கோவிலை காஞ்சி மகாபெரியவர், 30 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி செய்து, சுற்றிலும் தடுப்பு சுவரும் கட்டப்பட்டது.
கோவில் அமைந்துள்ள இடம்: பெரிய காஞ்சிபுரம் காமராஜர் நகர் நகராட்சி ஆறாவது வார்டு பகுதியில் அமைந்துள்ளது. புதிய ரயில் நிலை யத்தில் இருந்து நடக்கும் துாரத்தில் உள்ளது. கோவிலுக்கு வருமானம் இல்லாததால் உற்சவம் நடப்பதில்லை. பிரதோசம், மற்றும் சிவராத்திரி விழாக்கள் நடக்கிறது. மூலவர் வீரட்டானேஸ்வரர் பின் பகுதியில் கல் எறிந்து பூஜித்த லிங்கம் உள்ளது.