உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பர்மா மண்ணில் உருவான வீரம் நிறைந்த பிலிக்கான் முனீஸ்வரர்!

பர்மா மண்ணில் உருவான வீரம் நிறைந்த பிலிக்கான் முனீஸ்வரர்!

ஆதிகாலத்தில், சிவபெருமானுக்கு, பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கும் பொருட்டு தோன்றியவர் அங்காள பரமேஸ்வரி என,  நம்பப்படுகிறது. வீரமும், ஆவேசமும் நிறைந்த ஆண் தெய்வமாக, முனீஸ்வரர் கருதப்படுகிறார். இந்த இரு தெய்வங்களும், மனிதர்களின்  துயர் களைந்துள்ளனர். அது போல், உயிர் காக்க இடம் பெயர்ந்து, நந்தம்பாக்கம், பர்மா நகரில் குடியேறிய மக்கள், தங்களை காத்து,  தங்களது வாழ்வு மேம்பட காரணமாக, இந்த தெய்வங்கள் உள்ளதாக கருதுகின்றனர்.  கடந்த, 1967ல், பர்மாவில் இருந்து அகதிகளாக  வந்த ஆயிரக்கணக்கானோர், சென்னை, நந்தம்பாக்கத்தில் குடியேறினர். அவர்களை காலச் சூழலும் விரட்டியடித்ததால், ‘தெய்வம் தான்  தங்களைக் காக்க வேண்டும்’ என, நம்பினர்.

நந்தம்பாக்கத்தில் குடியேறியவர்களில் ஒருவரான, ஆண்டி வெள்ளச்சாமி என்பவர், ஈக்காட்டுதாங்கலில் வேலைக்கு செல்லும்போது, ஒரு  கிணற்றில் இருந்த படிக்கட்டு கல்லை எடுத்து வந்தார். அதற்கு பூஜை செய்து, கிராம தேவதை, ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி எனக்கருதி  வணங்க துவங்கினர்; பனை ஓலை பந்தலிட்டு, கும்பாபிஷேகம் நடத்தினர். அவரை அம்மக்கள் பின்பற்றி, அங்காள பரமேஸ்வரியை  வணங்க துவங்கினர்.  அம்மக்களின் குல தெய்வம், பர்மாவில் பிலிக்கான் என்ற ஊரில் உள்ள, முனீஸ்வரராவார். அவரை வழிபட  முடியாமல் தவித்த மக்கள், காலம் கைக்கூடியதும், 1997ல், பர்மா சென்று, பிலிக்கானில் மண் எடுத்து வந்து, அங்காள பரமேஸ்வரி  அம்மன் அருகில் உள்ள, அரசமரத்தடியில் முனீஸ்வரருக்கு கோவில் கட்டினர். அவரை, பிலிக்கான் முனீஸ்வரராக வழிபட்டு  வருகின்றனர்.

முனீஸ்வரரின் மகத்துவம் நாடு முழுவதும் பரவியதால், வெளியூர் மக்களும் முனீஸ்வரரை தேடி சென்று வழிபட துவங்கினர்.  முனீஸ்வரருக்கு அருகில், வீர மகாகாளி, வீர விநாயகர் சிலைகளும் வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த, 2002ல்,  பக்தர்கள் நன்கொடையால், 48 அடி உயரத்தில் முனீஸ்வரருக்கு சிலை வைத்துள்ளனர். ஒவ்வொரு வாரமும், பல ஊர்களில் இருந்து  வந்து, முனீஸ்வரருக்கு, பொரி, அவல், சுருட்டு, மதுபானங்களுடன் ஆடு, கோழி வெட்டி படையல் செய்து மக்கள் வழிபடுகின்றனர்.   அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு, சைவ வழிபாடு செய்யப்படுகிறது. அமாவாசை தோறும், கோவிலில் சிவப்பு முடி கயிறு  கட்டப்படுகிறது.  பக்தர்கள், தங்களது வேண்டுதல்களை மனுவாக எழுதி உண்டியலில் போட்டுச் செல்கின்றனர். அம்மனுக்கும், பக்தருக்கும்  மட்டும் தெரியும் வகையில், அதை பிரித்துப் படிக்காமல், உண்டியல் நிறைந்ததும், மனுக்களை கடலில் விட்டுவருவது, இந்த கோவிலின்  சிறப்பு.

பேய், பில்லி சூனியம், காத்து கருப்பு மேல் நம்பிக்கை உள்ளவர்கள், அம்மனை வழிபட்டால், நல்லது நடக்கும் என்று நம்பி வந்து  வழிபட்டுச் செல்கின்றனர். பக்தர்களுக்கு, விபூதி, குங்குமம் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தில், 11  நாட்களுக்கு  திருவிழா நடத்தப்படுகிறது.  முதல்நாள் பற்ற வைத்த அடுப்பை, 11ம் நாள் அணைப்பது திருவிழாவின் சிறப்பு. அந்த, 11  நாட்களுக்கு, தினமும் மூன்று வேளையும், அன்னதானம் வழங்கப்படுகிறது. கோவிலை, அறக்கட்டளை மூலம் தற்போது நிர்வாகம்  செய்கின்றனர்.

இடம்: பர்மா நகர், நந்தம்பாக்கம்.
நடை திறப்பு: காலை, 6:00 மணி முதல்,
10:30 மணி வரை
மாலை, 4:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை
விஷேச நாட்களில் சிறப்பு வழிபாடு
பவுர்ணமி தோறும் விளக்கு பூஜை, அலங்கார சாமி ஊர்வலம் இரவு, 7:00 மணி முதல், 9:00 மணி வரை
திருவிழா: பங்குனி உத்திரத்தில், 11 நாட்கள்
தொடர்புக்கு: கோவில் நிர்வாகி
மனோகரன் – 94445 44811.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !