காசிமடம் சுந்தரமூர்த்தி தம்பிரான் நெஞ்சுவலியால் காலமானார்
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் காசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள் நேற்று இரவு மகாசமாதி அடைந்தார். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் காசிமடம் இணை அதிபர் ஸ்ரீமத் சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள்,64,. இவர் திருக்கடையூர் ஓதுவாரின் மகனாக பிறந்த இவர் பி.எஸ்.சி., இயற்பியல் பட்டம் பெற்றவர். ரயில்வே துறையில் பணியாற்றிய இவர் சமய பணியில் பக்தி கொண்டு பணியினை துறந்து இவர் தருமபுரம் ஆதீனத்தில் சேர்ந்து தம்பிரான் ஆனார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திருப்பனந்தாள் காசி மடத்திற்கு வந்தார். கடந்த 7 ஆண்டுகளாக இணை அதிபராக அருளாட்சி செய்து வந்தார். பல்வேறு கருத்தரங்குகள், சமய மாநாடுகளில் பங்கெடுத்த சுவாமிகள் திருப்பனந்தாள் காசிமடத்தின் பணிகளில் அதிபர் ஸ்ரீமத் முத்துக்குமாரசுவாமி தம்பிரானுக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் மடத்தின் ஊழியர்களிடம் பேசி கொண்டிருந்துள்ளார். இரவு உணவு சாப்பிட்ட நிலையில் சுவாமிகளுக்கு இரவு 9 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயங்கிய சுவாமிகளை பரிசோதித்த டாக்டர்கள் சுவாமிகள் மகாசமாதி அடைந்ததாக தெரிவித்தனர். இவரது இறுதி சமாதி அடக்கம் நிகழ்ச்சி இன்று (20ம் தேதி) மதியம் திருப்பனந்தாள் காசி மடத்தில் நடக்கிறது. ஆதீன குருமகாசன்னிதானங்கள், மடாதிபதிகள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.