உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ருசிக்காக நாக்கு ஏங்குகிறதா?

ருசிக்காக நாக்கு ஏங்குகிறதா?

கும்பகோணம் அருகில் காஞ்சிப்பெரியவர் மீது பக்தி கொண்ட வயதான மூதாட்டி ஒருவர் இருந்தார். வசதிமிக்க அவருக்கு நிலபுலம் ஏராளமாக இருந்தது. வாரிசு இல்லாத நிலையில், காஞ்சிபுரம் மடத்திற்கு அவற்றை தானமாக அளித்து விட்டு பெரியவருக்கு சேவை செய்து வாழ்ந்தார். ஒருநாள் பெரியவர் பாட்டியை அழைத்து, ஏதாவது விருப்பம் இருந்தால் சொல்லும்படி கூறினார். அதற்கு மூதாட்டி, “எனக்கு வாழ்க்கையில ஒரே ஒரு ஆசை தான். நான் தயாரித்த பட்சணத்தை நீங்கள் ஏற்க வேண்டும்,” என்றார். மூதாட்டியின் வேண்டுகோளை ஏற்ற பெரியவர், அவர் செய்த மாவு உருண்டையை சாப்பிட்டார். இதைக் கண்ட மூதாட்டி அளவில்லாத மகிழ்ச்சியடைந்தார். அன்று மாலையில் மடத்திலுள்ள உயர் அதிகாரி ஒருவர், பெரியவரிடம் ஆலோசிப்பதற்காக அவரது இருப்பிடத்திற்கு வந்தார். பெரியவர் சிறு உருண்டைகளை கையில் வைத்தபடி சாப்பிடுவதைக் கண்டார். அதிகாரி மடத்து ஊழியர்களை அழைத்து, “இப்போது தான் பெரியவர் பிட்சை(உணவு) ஏற்றாரா?” என்று கேட்டார். அதற்கு ஊழியர்கள் மூதாட்டி மாவு உருண்டை கொடுத்த விபரத்தைக் கூறினர்.

அதிகாரி ஏதும் அறியாமல் பெரியவர் முன் நின்றார். அவரது மனநிலையை உணர்ந்த பெரியவர், “ என்ன சாப்பிட்டேன் என்று தானே சிந்திக்கிறாய்? காலையில் பாட்டி தந்த ருசியான சத்துமாவு உருண்டை சாப்பிட்டேன். ருசியான ஒன்றைச் சாப்பிட்டால் நாக்கு மீண்டும் அதற்காக ஏங்கும். அதை சரிசெய்ய சுவை இல்லாத பசும்சாண உருண்டைகளை உண்கிறேன்,” என்றார். பற்றற்று வாழ்வதே மகான்களுக்கு அழகு. அவர்களோடு பழகினாலே நமக்கும் விருப்பு வெறுப்பு இல்லாத பக்குவநிலை உண்டாகும் என்று நாராயணீயம் கூறுகிறது. இதற்கு எடுத்துக்காட்டான காஞ்சிப்பெரியவர், எனக்கு நானே நீதிபதி’ என்னும் நிலையில் செயல்பட்டார் என்பது மிகையில்லை. இதே போல மற்றொரு வியப்பான சம்பவத்தையும் கேளுங்கள். வேலுõர் மாவட்டம் எசையனுõரில் காஞ்சிப்பெரியவர் மூன்று மாதங்கள் தங்கியிருந்து சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொண்டார். செல்வ வளமும், பக்தியும் மிக்க கோகிலாம்பாள் என்ற பக்தை, வியாசபூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். அப்போது வேதபுரி என்னும் இளைஞர் தினமும் பெரியவரை தரிசிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். பெரியவரிடம் ஒருநாள், கோகிலாம்பாள் வந்தார். “பெரியவா....நீங்க தான் இந்த வேதபுரியை ரட்சிக்கணும் (பாதுகாக்க வேண்டும்)” என்று சொல்லி வணங்கினார்.

பெரியவரும் சம்மதிக்க, அன்று முதல் வேதபுரி பெரியவருக்கு சேவை செய்யும் பணியில் ஈடுபட்டார். ஒரு அமாவாசை நாளில், பெரியவர் வேதபுரி உள்ளிட்ட சீடர்களுடன் நீராட திருப்புட்குழி பெருமாள் கோவிலுக்கு புறப்பட்டார். அப்போது பெரியவர் ராமாயண வரலாற்றை எடுத்துரைத்தார். ராமர் இல்லாத சமயத்தில் தனிமையில் இருந்த சீதையை ராவணன் வஞ்சகமாக கடத்த முயன்றான். இதை கழுகுகளின் அரசனான ஜடாயு தடுக்க முயன்றார். கோபமடைந்த ராவணன் வாளால் ஜடாயுவை வெட்டி வீழ்த்தினான். காயம்பட்ட ஜடாயு தரையில் குற்றுயிராகக் கிடந்தார். சீதையைத் தேடிய ராமர் ஜடாயுவைக் கண்டு நடந்ததை அறிந்தார். ஜடாயு உயிர் துறக்கவே, ராமர் அங்கேயே அவருக்கு அந்திமக்கிரியை செய்தார். அந்த தலமே திருப்புட்குழி எனப்படுவதாக பெரியவர் சீடர்களுக்கு விளக்கினார். (புள்’ என்றால் பறவை). இதை சொல்லி விட்டு கோவிலுக்குள் பெரியவர் நுழையும் போது, வயதான கழுகு ஒன்று அங்கே பறந்து வந்தது. அதைக் கண்டதும் பெரியவர் வேதபுரியிடம், “இதோ பார்.... ஜடாயுவே வந்திருக்கிறார்” என்றார். அங்கிருந்த அனைவரும் கழுகை வணங்கி பரவசம் அடைந்தனர். (மகான் காஞ்சிப் பெரியவர்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !