ஜெயின் கோவிலில் நவராத்திரி விழா
கோவை : நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோவை சுபார்ஷ்வநாதர் கோவிலில் சரஸ்வதி பூஜை தொடங்கியுள்ளது. கோவை ரங்கே கவுடர் வீதியில், ஜெயின் சமூகத்தினர் வழிபடும் சுபார்ஷ்வ நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 29ம் தேதி முதல் சரஸ்வதி சிறப்பு பூஜை நடந்து வருகிறது. கோவிலில், கைலாய மலை வடிவத்தை உருவாக்கி, அதில் சரஸ்வதி சிலையை நிறுவியுள்ளனர். ஜெயின் சமூக பெண்கள், விரதம் இருந்தும், தியானம் செய்தும், சரஸ்வதியை வழிபட்டு வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு, நெல்லூரில் இருந்து வந்துள்ள ஆச்சார்யா வர்தமான் சாகர்ஜி, பன்யாஸ் மகேந்திர சாகர்ஜி ஆகியோர் ஆசி வழங்கி வருகின்றனர். ஏற்பாடுகளை, கோவில் தலைவர் மதன்லால் பாப்னா, ஜெயந்திலால் பாப்னா, அருண் பாப்னா செய்துள்ளனர். அருண் பாப்னா கூறுகையில், ""ஜெயின் சமூகத்தினர் சார்பில், நவராத்திரியை முன்னிட்டு கோவை சுபார்ஷ்வநாதர் கோவிலில் சரஸ்வதி பூஜை நடந்து வருகிறது. இக்கோவில் பக்தர்களில் 128 பேர், எட்டு நாளாக தொடர்ந்து விரதம் இருந்து வருகின்றனர். 234 பேர், ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருந்து வருகின்றனர். உலக அமைதிக்காக வேத யோக தியானத்தில் ஏராளமான பெண்கள் ஈடுபட்டுள்ளனர். பூஜை நிறைவு நாள் விழா, அக்.,3ல் நடக்கிறது. இதற்கென ரங்கோலி வரைதலும் நடந்து வருகிறது, என்றார். பக்தர்கள் பாராட்டும் முஸ்லிம் பெண்: கோவை ஜெயின் கோவிலில் கடந்த இரண்டு நாட்களாக ரங்கோலி வரையும் பணியில் இருவர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் இருவரும் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஜஹான் பதான் என்ற முஸ்லிம் இளம்பெண்ணும் ஒருவர். இவரது குடும்பத்தினர், கடந்த பத்து தலைமுறைக்கும் மேலாக, கடவுள் உருவங்களை ரங்கோலியாக வரைந்து புகழ் பெற்றவர்கள். அதனால், சிறு வயது முதலே, ஜஹான் பதானுக்கும், ரங்கோலி வரையும் கலையில் பெரும் ஆர்வம் ஏற்பட்டு விட்டது. சிவபெருமான், சரஸ்வதி, துர்கா என அனைத்து கடவுள் உருவங்களையும், தத்ரூபமாக வரைவது இவரது தனித்திறமை.கடந்த இரண்டு நாட்களாக ஜெயின் கோவிலில் தங்கி, கடவுள் உருவங்களை வரைந்து வரும் ஜஹான் பதான், ஜெயின் சமூகத்தினரை போலவே, சைவ உணவு மட்டுமே உண்டு வருகிறார்.