உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரராகவர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு மஹாளய அமாவாசையில் தர்ப்பணம்

வீரராகவர் கோவிலில் பக்தர்கள் வழிபாடு மஹாளய அமாவாசையில் தர்ப்பணம்

திருவள்ளூர்: மஹாளய அமாவாசையை ஒட்டி, திருவள்ளூர் வீரராகவர் கோவில் குளத்தில், திரளான பக்தர்கள், முன்னோருக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், செப்.,30 மஹாளய அமாவாசை என்பதால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், கோவில் வளாகத்தில் குவிந்தனர்.

திருமஞ்சனம்: அதிகாலையில், ஹிருத்தாபநாசினி குளத்தில் நீராடி, குளக்கரையில் தங்களது முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பின், பக்தர்கள் அனைவரும் நீண்ட வரிசையில் காத்திருந்து, வீரராகவ பெருமாளை தரிசித்தனர். மாலையில், உற்சவருக்கு திருமஞ்சனம் நடந்தது. முன்னதாக, கண்ணாடி அறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவர் வீரராகவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை பிரசித்தி பெற்றது என்பதால், குளத்தில் நீராட சென்ற பக்தர்களுக்கு, ஒரே ஒரு கதவு மட்டுமே திறக்கப்பட்டு, குளிக்க அனுமதிக்கப்பட்டது.

இதனால், உள்ளே நுழைய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், வயதான பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி தவித்தனர்; பலர் தடுமாறி கீழே விழுந்தனர். குளத்தில் இடமில்லாததால், தெருவிலேயே சிலர் அமர்ந்து திதி கொடுத்தனர். பல்லாயிரக்கணக்கானோர் கூடும் இவ்விழாவில், தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் மேற்கொள்ளவில்லை என பக்தர்கள் குறை கூறினர். மேலும், வரும் காலங்களில் அதற்கான வசதியை ஏற்படுத்த, வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் மலையடிவாரத்தில் உள்ள திருக்குளம் என்கிற சரவணப் பொய்கை குளத்தில், அதிகாலை, 5:30 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஆயிரக்கணக்கான நகர் மற்றும் கிராமவாசிகள் திரண்டனர். இதற்காக, 50க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் (குருக்கள்) மலைப்படிகளில் அமர்ந்திருந்தனர். தொடர்ந்து, நகர மற்றும் கிராமவாசிகள் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, முருகப்பெருமானை வழிபட்டனர்.

அம்மன்களுக்கு பூஜை: திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள படவேட்டம்மன், தணிகாசலம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன், துர்க்கையம்மன் மற்றும் திருத்தணி வன துர்க்கையம்மன் ஆகிய கோவில்களில், செப்.,30 சிறப்பு பூஜைகள் நடந்தன. நண்பகல், 12:00 மணிக்கு, மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை நடந்த சிறப்பு பூஜையில், திரளான பெண்கள் பங்கேற்று, பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !