ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாட வேண்டும்!
ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும் போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.
அம்மன் விரும்பும் நவராத்திரி: நவராத்திரி பூஜையை தெய்வங்களும், தேவர்களும்கூட செய்து பலன் பெற்றுள்ளனர். நாரதர் அறிவுரைப்படி ராமர் கடைப்பிடித்து ராவணனை அழித்து சீதையை மீட்டு வந்தார். கண்ணபிரான், சியமந்தக மணி காரணமாக அடைந்த அபவாதம் இப்பூஜை செய்ததால் நீங்கியது. பஞ்சபாண்டவர்கள் பாரதப் போரில் வென்றதும் இந்த பூஜை செய்ததால்தான். தீய சக்தி மேலோங்கும்போது காத்திட வேண்டினால் அம்பாள் சண்டிகையாக ஒன்பது கோடி வடிவங்கள் எடுத்து தீமையை அழித்து நன்மை செய்வாள் என தேவி மகாத்மியம் கூறுகிறது. நவராத்திரியில் 9 நாட்களும் பூஜை விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இயலாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருந்து பூஜை செய்யலாம். விஜயதசமி தினத்தில் அம்பிகை அசுரர்களை அழித்து வெற்றிவாகை சூடினாள். ஆணவம் சக்தியாலும், வறுமைசெல்வத்தினாலும், அறியாமைஞானத்தினாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் என்பதால் வீரம், செல்வம், கல்விக்கு உரிய தேவியரான துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி என முப்பெரும் தேவியர்க்கும் உரியதாக இதை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். அன்றைய தினம் புதிதாகத் தொடங்கும் எல்லாக் காரியங்களும் எளிதாக வசமாகும் என்பது ஐதீகம். அன்று அபிராமி அந்தாதியினைப் படிப்பது மிகச் சிறந்த பலன் தரும்.
நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத் தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜித்து வழிபட வேண்டும்.
நவராத்ரி வ்ரதப் பூமௌ குருதேயோ நரோத்தம
தஸ்ய புண்ய பலம் வக்தும் ஸக்தா ஸா பரமேஸ்வரீ.
நவராத்திரி விரத உணவு முறைகள்:
முதல் நாள்: பிரதமையன்று பர்வத ராஜனின் மகளாக தேவி அவதரித்து சிவன், விஷ்ணு பிரம்மா ஆகியோரின் சக்தியை ஒருங்கே பெற்று சதி, பவானி, பார்வதி, ஹேமாவதி என்று அழைக்கப்படுகிறாள். இந்த நாளில் கொலு வீற்றிருக்கும் தேவிக்கு சிகப்பு வஸ்திரம் அணிவிப்பது சிறப்பாகும்.
உணவு முறை:
இந்த நாளில் காலையில் இரண்டு வாழைப்பழங்கள் மற்றும் பால் அருந்தி மனதை ஒரு முகப்படுத்தி தியானம் செய்வதால் குண்டலினி செயல்பட ஆரம்பிக்கிறது. பிறகு மதியம் கேழ்வரகு கஞ்சி அருந்திவிட்டு இரவு கடலை சுண்டலை அம்மனுக்கு நிவேதனம் செய்து சாப்பிடலாம்.
இரண்டாம் நாள்:
துவதியை அன்று அம்பிகை பிரம்ம சாரிணியாக சிவனை மணப்பதற்காக விரதமிருந்து தவமிருந்ததால் நாமும் அன்று மனதை ஒருமுகப்படுத்தி தியானம் செய்வதால் சுவாதிஷ்டானம் செயல்படத் தொடங்குகிறது.
உணவு முறை:
இந்த விரதத்தின்போது நாம் காலையில் ஆப்பிள் போன்று ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம். மதியத்தில் பச்சைப்பயிறு வேகவைத்த சுண்டலையும் உண்ணலாம். இவ்வாறு விரதம் இருப்பதால் வாழ்வில் செல்வம், மகிழ்ச்சி, மற்றும் மோட்சம் கிட்டும். இரவில் இரண்டு வாழைப்பழம், பால். அந்த நாளில் நவராத்திரியில் கொலு வீற்றிருக்கும் அம்மனுக்கு நீல நிறப் புடவை அணிவிப்பது சிறப்பு.
மூன்றாம் நாள்:
திரிதியை அன்று அம்பிகை சந்திரகாந்தா ரூபமாகக் காட்சியளிக்கிறார். அப்போது மணி வடிவில் பிறைச்சந்திரனை சூடி இருப்பாள்.
இந்த தேவியின் உருவத்தை மனதில் கொண்டு தியானித்தால் மணிபூரக சக்ரா செயல்படத் தொடங்கி மனம் புனிதமடையும், காமம், கோபம் போன்ற தீய சக்திகளுக்கு எதிராகப் போராடும் வலிமை நமக்குக் கிடைக்கும்.
உணவு முறை:
காலை முளைவிட்ட பயறு, ஊறிய வெந்தயம், சிறிது மிளகுத்தூள் மற்றும் சிட்டிகை உப்பு கலந்து மென்று சாப்பிடலாம். மதியம் - கடலை பருப்பு, பாசிப்பருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் பூசணி கலந்த கிச்சடி. இரவு - ஜவ்வரிசி உப்புமா.
நான்காம் நாள்:
சதுர்த்தியன்று அன்னை கூஷ்மாண்டாவாகக் காட்சியளிக்கிறாள். இந்த அன்னை - உலகில் உள்ள அனைவரும் சிரித்து மகிழ்ச்சியாக இருப்பதற்காக அவதரித்தவள். இவளுக்குப் பத்து கைகள் உள்ளன. இந்நாளில் தேவி மஞ்சள் நிறப்புடவையை அணிந்திருப்பாள்.
கூஷ்மாண்டாவை எண்ணி தியானிப்பதால் அனாஹதசக்ரம் வலுவடையும். இதனால் மனதில் அன்பும், கருணையும் பெருகி தைரியம் மேலிடும். நோய் நொடிகளில் இருந்து தேகம் காக்கப்படும்.
உணவு முறை:
காலை காய்கறி சாதம் மற்றும் ஒரு டம்ளர் எலுமிச்சை பழச்சாறு, மதியம் கோதுமை களி, மோர். இரவு -கோதுமை ரவை உப்புமா.
ஐந்தாம் நாள்:
பஞ்சமி அன்று தேவி ஸ்கந்த மாதாவாகக் காட்சியளிக்கிறாள். அப்போது பச்சை நிற சேலை உடுத்தி மடியில் குழந்தை வடிவில் முருகப்பெருமானை அமர்த்திக் காட்சியளிக்கிறாள். இந்த உருவத்தை மனதில் நிறுத்தி தியானம் செய்தால் விசுக்தி சக்கரம் வலுப்பெறும். இதனால் தெய்வநிலையை அடைய மார்க்கம் கிட்டும். விசுக்தி சக்கரத்தில் சக்தி நிலைபெறும்போது வாக்கு தூய்மையாகிறது. நல்ல பேச்சாற்றல் கிடைக்கும். படிக்கும் மாணவர்களுக்கு ஞானமும் ஒருமுக கவனமும் கிடைக்கிறது.
உணவு முறை:
காலை - பழவகை சாலட் மற்றும் தக்காளிச்சாறு, மதியம் - கேழ்வரகு, கோதுமை கலந்த சாதத்தில் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிடலாம். பிறகு ஒரு டம்ளர் மோர் அருந்தலாம். இரவு - காய்கறி கலந்த கிச்சடி.
ஆறாம் நாள்
சஷ்டியன்று தேவி கதாயுதத்தைப் பிடித்தபடி காத்யாயினியாக சாம்பல் நிறத்தில் புடவை அணிந்தபடி காட்சி தருகிறாள். அப்போது இந்த உருவத்தை மனதில் இருத்தி, தியானித்தால் நம் உடலில் உள்ள ஆக்ஞா சக்கரம் வலுவடையும். இது இறைவனை உணர, அடைய மேற்கொள்ளும் தியானமுறை.
ஆக்ஞா சக்கரமே மூன்றாவது கண் எனப்படுகிறது. இங்கு சக்தி நிலை பெறும்போது முக்காலமும் உணரும் சக்தி கிடைக்கிறது. தியானம் செய்யும்போது ஆன்மீக உயர்நிலையில் இருப்போர் ஆக்ஞா சக்கரத்திலேயே தியானிக்கின்றனர்.
உணவு முறை:
காலை ரவா கேசரி மற்றும் ஒரு டம்ளர் வெந்நீரில் கால் ஸ்பூன் மஞ்சள் பொடி, மிளகுப் பொடி மற்றும் சுக்குப் பொடி கால் ஸ்பூன் கலந்து வெது வெதுப்பாக குடிக்கவும். மதியம் - இரண்டு சப்பாத்தி மற்றும் அவியல். இரவு உருளைக்கிழங்கை வேகவைத்து லேசான உணவுடன் கலந்து உண்ணலாம்.
ஏழாம் நாள்:
சப்தமி அன்று தேவியானவள் ஆரஞ்சு நிறத்தில் புடவை உடுத்தி கருப்பு நிறக்கழுதை மீது அமர்ந்து காட்சியளிக்கிறாள். காலராத்ரி என்ற பெயருடைய இந்த அன்னையை தியானம் செய்யும்போது சகஸ்ரார சக்ரத்தினை மனதில் நிறுத்தி தியானம் செய்ய வேண்டும். இதனால் அனைத்து சித்திகளையும் அடையலாம். பற்றுதல்கள் விலகும்.
உணவு முறை:
காலை பழ சாலட் மற்றும் கைப்பிடி கோஸ், ஒரு தக்காளி, ஒரு கேரட், பாதி சிறிய பீட்ரூட் இவை கலந்த ஜுஸ் பருகவும் (அசிடிட்டி அல்சர் மற்றும் இரத்தம் சீர்பட உதவும்) மதியம் - துவரம், கடலை, உளுத்தம் பருப்புகளை பொடி செய்து நெய் சாதத்துடன் சாப்பிடலாம். இரவு -அவல் உப்புமா.
எட்டாம் நாள்:
அஷ்டமி அன்று தேவி வெள்ளை நிறத்தில் மகா கவுரி என்ற பெயரில் காளையின் மீது அமர்ந்து காட்சியளிக்கிறாள். வெள்ளைப் புடவை அணிந்திருக்கும். இந்தத் தேவியை தியானம் செய்தால் முன்ஜென்ம வாசனை அறுபடும். அன்று காளி அவதார நாள் என்பதால் எதிரிகளை வெல்லக்கூடிய தைரியம் பிறக்கும்.
துர்காஷ்டமி அனைத்து பயங்களையும் போக்கி, தைரியத்தையும் வெற்றியையும் தருகிறது. சகஸ்ராரத்தையும் தாண்டிய அண்டவெளியை தியானிக்கும் நிலை இது.
உணவு முறை:
காலை - கோதுமை உப்புமா, மதியம் - அக்கார அடிசல், இரவு - கோதுமை மாவு, அரிசிமாவு, கடலை மாவு கலந்த தோசை.
ஒன்பதாம் நாள்:
நவராத்திரியின் ஒன்பதாம் நாளான நவமியன்று அஷ்டமா சித்திகளையும் பெறுவதற்காக சித்திதாத்ரி என்ற பெயரில் பழுப்பு நிறப் புடவை அணிந்து காட்சியளிக்கின்றாள். சிவன் இந்த தேவியை வழிபட்டு அஷ்டமா சித்திகளையும் அடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தேவியின் மூலமாக அர்த்த நாரீஸ்வரராகவும் சிவன் காட்சி தருகிறார்.
இதுவே சக்ரங்களையும், பல அண்டங்களையும் தாண்டிய பூரண நிலை. இந்த ஒன்பது நிலைகளை, சக்திகளாக நாம் உடலிலும், சிரத்தின் மேலும் தியானிக்கவே ஒன்பது ராத்திரிகள் சக்திராத்திரிகளாக ஆகின்றன.
இவ்வாறாக உடலிலுள்ள சக்கரங்களை சித்தி செய்து பெறுவதற்கும், இறை வழிபாட்டில் அமைதி, மேன்மை அடையவும், உலகை வெல்லவும், அன்னையின் நவராத்திரி வழிபாடு கொண்டாடப்படுகிறது.
உணவு முறை:
காலை - இலை அவல், நெல்பொரி, பொட்டுக்கடலை, வேர்க்கடலை, உப்பு கடலை ஆகியவற்றை சம அளவு வறுத்துச் சேர்த்து உண்ணவும், பிறகு ஆரஞ்சு (அ) சாத்துக்குடி ஜுஸ், மதியம் - சப்பாத்தி, உருளைக்கிழங்கு, இரவு - காய்கறிகள் கலந்த நெய் உப்புமா (அ) அரிசி கொழுக்கட்டை.
மேற்குறிப்பிட்ட உணவுகளில் அதிக உப்பு, வெள்ளைச் சர்க்கரை சேர்த்துக் கொள்வதைத் தவிர்க்கவும்.
ஒன்பது நாளும் ஒரே உணவை மட்டுமே உண்ணும் விரத முறையும் உள்ளது. உதாரணமாக ஒன்பது நாட்களும் இட்லி மட்டுமே சாப்பிடலாம். உடன் சம்பார் போன்ற புளி, கார உணவினை தவிர்த்து, கொத்தமல்லி, புதினா சட்னிகளை எடுத்துக் கொள்ளலாம்.
மேற்கண்ட விரதம் எட்டு (அ) ஒன்பது நாட்களில் கன்யா பூஜை முடிந்த பின் முடிவுக்கு வருகிறது.
இந்தியாவில் அக்டோபர் மாதம் இந்தப் புனிதமான நாட்கள் சம்பவிக்கின்றன. ஆன்மிகத்தில் முன்னேற்றம் அடைய விரும்புபவர்கள் மேற் சொன்னபடி விரதமிருந்து, சக்தியை அந்தந்த சக்ரத்தில் தியானித்து உயர்வடையலாம்.