புரட்டாசி மஹாளய அமாவாசை: காவிரியில் திதி கொடுத்த மக்கள்
நெரூர்: மஹாளய அமாவாசை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம் மற்றும் நெரூர் பகுதியில் காவிரியாற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
இதுகுறித்து, நெரூர் காவிரியாற்றில் தர்ப்பணம் செய்து வைத்த அர்ச்சகர் சதாசிவம் கூறியதாவது: ஆண்டு முழுவதும் அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை சிறப்பானது. இதில், புரட்டாசி மஹாளய அமாவாசை மிகவும் சிறப்பானது. அன்றைய தினம், தாய் வழியில் ஆறு பேர், தந்தை வழியில் ஆறு பேர் ஒன்றாக அமர்ந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது சிறப்பானதாகும். நெரூர் காவிரியாற்றில், 2,000 பேர் வரை வந்து சென்றனர். இவர்களுக்கு இங்கு 50க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் திதிக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். இந்நாளில், ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்றாக அமர்ந்தும் திதி கொடுக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். நெரூரில் காவிரியாற்றில் குளித்து முடித்த பின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பின் அருகிலுள்ள பிரமேந்திராள் அதிஷ்டானத்தை வணங்குவது வழக்கம். அதன்படி, செப்.,30 ஆயிரக்கணக்கானோர், பிரமேந்திராள் அதிஷ்டானத்தை வணங்கினர்.