ஸ்ரீரங்கம் கோயிலில் தாயாருக்கு சாமரம் வீசி, நொண்டியடித்து வழிபட்ட யானை!
ADDED :3289 days ago
திருச்சி: நவராத்திரி விழாவை முன்னிட்டு, ஸ்ரீரங்கம் தாயாருக்கு சாமரம் வீசியும், இசை இசைத்தும், நொண்டியடித்தும் கோயில் யானை ஆண்டாள் வழிபாடு செய்தது.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையான, பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கையாகவும், அடுத்த 3 நாட்கள் மகாலட்சுமியாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியாகவும் அம்பாள் அருள்பாலிப்பார். விழாவை முன்னிட்டு, ரெங்கநாயகி தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கொலுமண்டபம் வந்தடைந்தார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. விழாவில் ஸ்ரீரங்கத்து கோயில் யானை ஆண்டாள், தாயாருக்கு சாமரம் வீசியும், இசை இசைத்தும், நொண்டியடித்தும் வழிபாடு செய்தது. இதை ஏராளமான பக்தர்கள் கண்டுரசித்தனர்.