முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி கோயிலில் அமைச்சர் விரதம்!
திருப்பரங்குன்றம்: முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி பேரவை, மதுரை மாவட்ட அ.தி.மு.க., சார்பில் அக். 9 ல் 12 ஆயிரம் அ.தி.மு.க, தொண்டர்கள் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பால் குடம் எடுக்கின்றனர்.நேற்று கோயிலில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, தொண்டர்கள் காப்பு கட்டிக் கொண்டனர். காப்பு கட்டிக் கொண்ட தொண்டர்கள் மூன்று நாட்கள் கோயில் மண்டபங்களில் தங்கி விரதம் மேற்கொள்கின்றனர். நேற்று காப்பு கட்டிக் கொண்ட அமைச்சர் உதயகுமாரும் தொண்டர்களுடன் கோயில் மண்டபத்தில் தங்கி விரதம் மேற்கொள்கிறார். அவருடன் எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். பால்குடம் எடுப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்க நிர்வாகிகள் அவரவர் பகுதியிலுள்ள அ.தி.மு.க.,வினரை தயார்படுத்துகின்றனர்.நேற்று கோயிலில் அ.தி.மு.க., வினர் ஏராளமானோர் கூடினர். இதனால் பக்தர்கள் சிரமத்திற்கிடையே சுவாமி தரிசனத்திற்கு சென்றனர்.