கோவில் வளாகமா... கார் நிறுத்தமா?அமைச்சர்கள் மீது பக்தர்கள் அதிருப்தி!
திருவொற்றியூர்: திருவொற்றியூர் பெருமாள் கோவிலில், முதல்வர் நலம் பெற வேண்டி நடந்த பூஜையில் கலந்து கொள்ள வந்த, அமைச்சர்களின் கார்கள், கோவில் வளாகத்தினுள் நிறுத்தப்பட்டதால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர். முதல்வர் பூரண நலம் பெற வேண்டி, காலடிப்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலில், பகுதி செயலர் கிருஷ்ணன் நேற்று மதியம், சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். இதில், கலந்து கொள்ள அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், மாவட்ட செயலர் அலெக்சாண்டர் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது, அமைச்சர்களின் கார்கள், கோவில் வளாகத்தினுள் கொடி மரத்தின் அருகே நிறுத்தப்பட்டன. அதைப் பார்த்த பக்தர்கள், அமைச்சர்கள் மீது கடும் அதிருப்தியடைந்தனர். மேலும், அமைச்சர்கள், மாவட்ட செயலரை பார்க்கும் அவசரத்தில், அ.தி.மு.க.,வினர் காலணிகளுடன் கோவிலுக்குள் வந்தது, அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. ‘கோவில் வளாகத்தினுள், பெருமாளின் கருட வாகனம் வலம் வரலாமே தவிர, கார்கள் வலம் வரக்கூடாது. இது, ஆகம விதிகளுக்கு முரணானது’ என, பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.