உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அர்ஜுனாவுக்கு புஷ்பார்ச்சனை : யதுவீர் புறக்கணிப்பு

அர்ஜுனாவுக்கு புஷ்பார்ச்சனை : யதுவீர் புறக்கணிப்பு

மைசூரு: மைசூரு தசரா விழாவில், தங்க அம்பாரியை சுமக்கும் அர்ஜுனா யானைக்கு நடக்கும் புஷ்ப அர்ச்சனையின் போது, ராஜகுடும்பத்தை சேர்ந்த யதுவீர் கிருஷ்ண தத்த சாம்ராஜ உடையார் பங்கேற்காதது சர்ச்சையை எழுப்பியுள்ளது. மைசூரு தசரா ஊர்வலத்தில், சாமுண்டீஸ்வரி தேவி அமர்ந்துள்ள, 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமந்து வரும் அர்ஜுனா யானைக்கு, அரண்மனை அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில், முதல்வர் சித்தராமையா, மேயர் பைரப்பா, கலெக்டர் ரந்தீப், மண்டல ஆணையர் ஜெயந்தி, போலீஸ் கமிஷனர் தயானந்த் ஆகியோர் புஷ்பார்ச்சனை செய்தனர். அதேசமயம், ராஜ குடும்பத்தை சேர்ந்த யதுவீர் பங்கேற்கவில்லை. ராஜ குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம் முறையாக அழைப்பு விடுக்கவில்லை. அரச குடும்பத்திற்கு சேர வேண்டிய தசரா பொருட்காட்சியின் பார்க்கிங் இடத்தை பதிவு செய்து கொடுக்காததால், யதுவீர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இதற்கு விளக்கமளித்து, கலெக்டர் ரந்தீப் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:புஷ்பார்ச்சனை நடந்த வேளையில், அரண்மனையில் ராஜ குடும்பத்தின் சார்பில் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், யதுவீர் பங்கேற்க வேண்டியிருந்ததால், புஷ்பார்ச்சனையில் பங்கேற்கவில்லை. இதற்கு வேறு எந்த காரணமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !