வத்திராயிருப்பு கோயில் தேரோட்டம்
வத்திராயிருப்பு, வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழாவில் ஏராளமான கிராமத்தினர் திரண்டு வடம்பிடித்து இழுத்தனர். வத்திராயிருப்பு பகுதியில் பிரசித்தி பெற்றது முத்தாலம்மன் கோயில். நுாறாண்டு பாரம்பரியம் கொண்ட இக்கோயில் விழா அக்.5 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மும்மதத்தினர் பங்கேற்ற கலைவிழா , கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
நேர்த்திக்கடன்: ஏழாம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. அதிகாலையில் அம்மன் தேரில் எழுந்தருள சிறப்பு பூஜை பின் தேர் வீதி உலா துவங்கியது. பக்தர்கள் மாவிளக்கு , ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம் 12.30 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அம்மனை தாரை,தப்பட்டை முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு மஞ்சள் நீராட்டு , சிறப்பு பூஜை நடந்தது.
பிரியாவிடை: இங்கு அம்மனுக்கு உருவ வழிபாடு இல்லை. வெறும் பீடத்திற்கு மட்டுமே வழிபாடு நடக்கும். தேரோட்டம் அன்று ஒருநாள் மட்டும் அம்மன் உருவமாய் காட்சியளிப்பார். இதற்காக அம்மன்,பக்தர்களுக்கு பிரியாவிடை கொடுத்து புறப்படும் பிரியாவிடை நிகழ்ச்சி நடந்தது. அம்மன் மூன்று முறை கோயிலை சுற்றிவந்து பக்தர்களுக்கு பிரியாவிடை அளித்தார். பல்வேறு கிராம பக்தர்கள் பூக்களை துாவி வழியனுப்பினர். கோயில் செயல் அலுவலர் சுந்தர்ராஜன், தக்கார் ராமராஜா , பக்தசபா செயலாளர் விவேகானந்தன், தலைவர் சுந்தர்ராஜப்பெருமாள், மகாலிங்கம், ராமச்சந்திரன் ஏற்பாடுகளை செய்தனர்.