மழை வேண்டி கோவிலில் கிராமத்தினர் சிறப்பு வழிபாடு
தேன்கனிக்கோட்டை: தளி அருகே, மழை வேண்டி மல்லேஸ்வர சுவாமி கோவிலில், கிராம மக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும், 1,001 குடம் தண்ணீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி ஒன்றியத்தில் உள்ளது தேவர்பெட்டா மலை கிராமம். இந்த கிராமத்தில் மழை இன்றி பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், அந்த கிராம விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்நிலையில், மழை வேண்டி, தேவர்பெட்டா மலை மீதுள்ள மல்லேஸ்வர சுவாமிக்கு, 1001 குடம் தண்ணீரால் சிறப்பு அபிஷேகம் செய்வது என, கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி, நேற்று மல்லேஸ்வர சுவாமிக்கு, தேவர்பெட்டா மற்றும் அதை சுற்றியுள்ள, ஐந்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சிறப்பு யாகங்கள் நடத்தி, 1001 குடம் தண்ணீரால் அபி?ஷகம் செய்து, சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து கோவிலில் பஜனை நடந்தது. இதில், ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று, மழை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சுவாமியை மனமுருக வழிபட்டனர். பின், அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.