உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலந்தீபாவளி கொண்டாடிய வடசித்தூர் கிராம மக்கள்

மயிலந்தீபாவளி கொண்டாடிய வடசித்தூர் கிராம மக்கள்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள வடசித்துார் கிராம மக்கள், தீபாவளிக்கு மறுநாளான நேற்று மயிலந்தீபாவளியாக புத்தாடை அணிந்து கொண்டாடினர். கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட வடசித்துார் ஊராட்சியில், வடசித்துார், செல்லப்பகவுண்டன்புதுார், குரும்பபாளையம் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரமும் இந்த ஊராட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீபாவளியன்றுதான் புத்தாடை அணிந்து கொண்டாடுவது வழக்கம். ஆனால், வடசித்துார் கிராமத்தில் மட்டும் பல தலைமுறைகளாக தீபாவளிக்கு மறுநாள் மயிலந்தீபாவளி அன்று தான் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்தும், வாண வேடிக்கையுடன் கொண்டாடி வருகின்றனர்.ஆண்டுதோறும் இந்நாளன்று ராட்டினம் அமைக்கப்பட்டு ஊரே திருவிழாகோலம் பூண்டு காணப்படும். இக்கிராமத்தில் இந்துக்கள் மட்டுமில்லாது முஸ்லீம் குடும்பங்களும் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் உறவினர் போல் பழகி வருவதால், ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவில் கலந்து கொள்கின்றனர். இக்கிராமத்தில் வசிக்கும் கவுண்டர் இனத்தில், செம்பங் கூட்டம் என்ற குலத்தினர் அதிகளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் செவ்வாய்க் கிழமை அன்று அசைவம் உண்பதில்லை. இதனால், தீபாவளி செவ்வாய்கிழமை அன்று வந்ததால், மறுநாள் தீபாவளியை கொண்டாடி வந்தனர். இதனால், இதற்கு மயிலந்தீபாவளி என்று அழைக்கப்பட்டு வருகிறது. அன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுகிறது.இங்கு இந்து, முஸ்லீம் மக்கள் பலதலைமுறைகளாக ஒற்றுமை உணர்வுடன் கொண்டாடி வருவது, இக்கிராமத்தின் தனிச்சிறப்பாக இதுவரை இருந்து வருகிறது. இக்கிராமத்தில் இருந்து திருமணமாகி சென்ற பெண்கள், புகுந்த வீட்டில் தீபாவளியை முடித்து விட்டு, தாய்வீட்டில் நடக்கும் மயிலந்தீபாவளிக்கு விருந்தினராக வருவது சிறப்புமிக்கது. அதன்படி, நேற்று மயிலந்தீபாவளியன்று, பொதுமக்கள் அதிகாலையில் எழுந்து, எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து புத்துணர்வுடன் கொண்டாடினர். கடந்த 25ல் மாரியம்மன் கோவில் நோன்பு சாட்டப்பட்டது. இதனால், 15 நாட்களுக்கு வீட்டில் அசைவம் சமைப்பதில்லை. மேலும், 15 நாட்கள் கழித்து மூன்று நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதனால், நேற்று மயிலந்தீபாவளியன்று கிடா வெட்டு நிகழ்ச்சி இல்லை. இதனால், இம்முறை சைவம் மயிலந்தீபாவளியாக பொதுமக்கள் கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலை, 4:00 மணியளவில், மக்கள் அனைவரும், ஊராட்சி அலுவலகம் முன்பு உள்ள மைதானத்தில் ஒன்று கூடி, அங்கு அமைக்கப்பட்டுள்ள ராட்டினத்தில் உற்சாகமாக விளையாடியும், மயிலந்தீபாவளி வாழ்த்துக்களை ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக் கொண்டனர். மேலும், கடை வீதி முழுவதும் கடைகள் அமைக்கப்பட்டு விழாக் கோலம் பூண்டு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !