திருச்செந்தூர் கந்தசஷ்டிவிழா: தங்க தேரில் ஜெயந்திநாதர்!
துாத்துக்குடி, திருச்செந்துார் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நான்காம் நாளில் தங்கத்தேரில் எழுந்தருளி கிரிவலம் வந்த ஜெயந்திநாதரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்துார். இங்கு சூரசம்ஹார விழா சிறப்பாக நடந்து வருகிறது. சூரசம்ஹார விழாவில் ஆரம்ப நிகழச்சியான யாகசாலை பூஜை அக்.,31 ல் துவங்கியது. நான்காம் நாளான நேற்று அதிகாலை மூன்று மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 3.30 க்கு விஸ்வரூபம்,4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிேஷகம், தீபாரதனை நடந்தது. காலை 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வாணையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். பின் யாகசாலை பூஜை நடந்தது. மூலவருக்கு காலை 9 மணிக்கு உச்சிகால அபிேஷகம் நடந்தது. யாகசாலையில் மகா தீபாரதனை நடந்தது.
ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீர வாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன், சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளினார். பின் மாலை 4.30 மணிக்கு சஷ்டி விரத மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளி, அங்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. பின் தங்க தேரில் ஜெயந்திநாதர் எழுந்தருளி, கிரி வலப்பாதை வலம் வந்து, இரவு 8 மணிக்கு கோயில் வந்து சேர்ந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நவ., 5ம் தேதி நாளை அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 க்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிேஷகம், மற்ற கால வேளை பூஜைகள் தொடர்ந்து நடக்கும். மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் திரளுவார்கள் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.