கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு: ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியுள்ளது. திருவண்ணாமலையில், கார்த்திகை தீப திருவிழா ஏற்பாடுகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில் நகராட்சி, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று கூட்டாக, திருவண்ணாமலை நகர் முழுவதும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சாலையோர கடைகள், மாட வீதி மற்றும் பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பகுதி, கால்வாய் ஆக்கிரமிப்பு போன்றவற்றை கண்டறிந்து, அவற்றை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று, மணலூர்பேட்டை பஸ் ஸ்டாண்ட், பெரிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். திருவண்ணாமலை நகர் முழுவதம் தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கும் என அதிகாரிகள் கூறினர்.