சபரிமலையில் சீசன் தொடங்க இன்னும் 10 நாட்கள்: குடிநீர் பிரச்னை பெரிய சவாலாகிறது!
சபரிமலை, சபரிமலையில் சீசன் தொடங்க இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேவசம்போர்டு-அரசு பனிப்போரால் பக்தர்களுக்கான வசதிகள் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் பிரச்னை பெரிய சவாலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிது. சபரிமலையில் மண்டல காலம் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக 15-ம் தேதி மாலை நடை திறக்கிறது. தேவசம்போர்டு தலைவர் மற்றும் ஒரு உறுப்பினர் காங்கிரஸ் ஆட்சியியில் நியமிக்கப்பட்டவர்கள். தற்போதைய இடது முன்னணி அரசுக்கும், இவர்களுக்குமிடையே பனிப்போர் நிலவி வருகிறது. பரஸ்பரம் இருதரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவதால் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சீசனுக்காக 158 பணிகள் செப்டம்பரில் டெண்டர் விடப்பட்டது. வெளிமாநில தொழிலாளர்கள் சபரிமலையில் பணி செய்யக்கூடாது என்று கூறி, சி.ஐ.டி.யூ.,வினர் நடத்திய வேலை நிறுத்த போராட்டமும் பணிகளை பாதிப்படைய செய்தது.
குடிநீர்: சபரிமலை மற்றும் அங்கு செல்லும் பாதைகளில் பாட்டில் குடிநீர் விற்பனை செய்வதை கேரள ஐகோர்ட் தடை செய்துள்ளது. ஆனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இடத்தில் அதற்கான மாற்று ஏற்பாடு பாதி அளவு கூட எட்டவில்லை. 4.7 கோடி ரூபாய் செலவில் குடிநீர் வசதி ஏற்படுத்த போர்டு அண்மையில்தான் டெண்டர் விட்டது. இது சீசனுக்கு முன் நிறைவு பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் ஒரு மணி நேரத்துக்கு தலா 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்க முடியும். குடீநீர் வாரியம் சார்பில் 132 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது. என்றாலும் குடிநீர் பிரச்னை இந்த சீசனில் பெரும் சவாலாகவே இருக்கும் என்று கருதப்படுகிறது.
அன்னதானம்: தனியார் அன்னதானம் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில் தேவசம்போர்டுதான் முழுக்க முழுக்க அன்னதானம் வழங்க வேண்டும். இதுவரை இங்கு ஒரே நேரத்தில் 500 பேருக்கு மட்டுமே அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாளிகைப்புறம் கோயில் அருகே புதிய அன்னதானம் மண்டத்தின் ஒரு தளம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு இரண்டாயிரம் பேருக்கு உணவு வழங்க முடியும். பம்பையில் இரண்டு அடுக்கு கட்டடத்தில் மூவாயிரம் பேருக்கு உணவு கொடுக்க முடியும். சன்னிதானத்தில் 23.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் எதிர்பார்க்கப்பட்டது போல வெற்றி பெறாததால் பம்பை மீண்டும் அசுத்தமாகும் நிலை உள்ளது. பல ஆயிரம் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் நிலக்கல்லில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது. இங்கு டேங்கர்களில்தான் தண்ணீர் கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது.