உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகம் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் அலுவலகம் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம்

நாமக்கல்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலிலுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. நாமக்கலில், 18 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் சுவாமி திறந்த வெளியில், பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். விஷேச நாட்களில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிவர். கோவிலின் வரவு செலவு கணக்குகள், அலுவலர்கள், பணியாளர்கள் வருகை பதிவேடு என பல்வேறு அலுவல் பணிகளை கவனிக்க ஏதுவாக, கோவில் வளாகத்திலேயே, சிறிய அறையில் அலுவலகம் இயங்கி வந்தது. உதவி ஆணையர் தலைமையில், 10க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் அலுவலகத்தில், போதிய இடவசதி இல்லாததால், கோப்புகளை பராமரிக்க முடியாமல் அலுவலர்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது, கோவில் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது: கோவில் அலுவலகத்தில், இடப்பற்றாக்குறையால் ஊழியர்கள் அவதிப்படுவதை தவிர்க்கும் வகையில், வளாகத்தின் பின்புறம் இருந்த காலி இடத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய அலுவலகம் கட்டும் பணிகள் நடக்கிறது. இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிய அலுவலகம் திறக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !