சபரிமலையில் ஒரே நேரத்தில் 2000 பேருக்கு அன்னதானம்: தேவசம்போர்டு ஏற்பாடு
சபரிமலை: சபரிமலையில் வரும் மண்டல, மகரவிளக்கு சீசனில் ஒரே நேரத்தில், இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க தேவசம்போர்டு ஏற்பாடு செய்துள்ளது. சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் அன்னதானம் வழங்கி வந்தது. இதில் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, கேரள ஐகோர்ட் தனியார் அன்னதானத்தை தடை செய்து, தேவசம்போர்டு முழு நேரம் அன்னதானம் வழங்க உத்தரவிட்டது. இதற்காக புதிதாக அன்னதான மண்டபம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் தேவசம்போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது: கடந்த ஆண்டு வரை 200 பேருக்கு மட்டும் ஒரே நேரத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த சீசனில் ஒரே நேரத்தில் இரண்டாயிரம் பேருக்கு வழங்க முடியும். காலையில் உப்புமா, பொங்கல், மதியம் சாப்பாடு, இரவு சப்பாத்தி, கஞ்சி ஆகியவை வழங்கப்படும். டைனிங் ஹால் கிளீனிங் செய்யும் நேரத்தை தவிர்த்தால் காலை ஏழு மணி முதல் இரவு 11:00 மணி வரை இடைவிடாது வழங்கப்படும் , என்றார்.மேலும் பாட்டில் குடிநீர் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இரண்டே கால் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரும், கொதிக்க வைக்கப்பட்ட மூலிகை தண்ணீரும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்காக, போலீஸ் கட்டுப்பாட்டில் நடைபெறும் "புண்ணியம் பூங்காவனம் திட்டத்தில் மாற்றம் ஏற்படுத்தவும் தேவசம்போர்டு திட்டமிட்டு உள்ளது.