கோடிகளில் சொத்து இருந்தும்.. நித்யபூஜைக்கே திண்டாடும் கரிவரதராஜ பெருமாள்!
பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்குச் சொந்தக்காரரான, வடவள்ளி கரிவரதராஜ பெருமாளுக்கு, நித்ய பூஜை செய்யக்கூட வழியில்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அர்ச்சகர் எடுத்துச் சென்ற ஐம்பொன் சிலை உள்ளிட்ட பொருட்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலின் உபகோவிலான, வடவள்ளி, கரிவரதராஜ பெருமாள் கோவில் புராதனமானது. மருதமலைக்கு வரும் பக்தர்கள், இவரையும் வழிபட தவறுவதில்லை. இக்கோவிலில் ஆண்டு முழுவதும் உற்சவங்களும், வைபவங்களும் நடைபெற்றன. பக்தர்கள் இக்கோவிலிற்கு ஏராளமான பொருட்களையும், நிலங்களையும் உபயமாய் கொடுத்துள்ளனர்.
புஞ்சையுண்டு நஞ்சையுண்டு...: கோவிலுக்கு வடவள்ளியில், நன்செய் மற்றும் புன்செய் நிலங்கள் உள்ளன. அதில் பாக்கு, தென்னை மரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு சொந்தக்காரரான, கரிவரதராஜ பெருமாளுக்கு, சமீபகாலமாக கோவிலில், சரிவர பூஜைகளோ, உற்சவங்களோ நடைபெறுவதில்லை. போதாக்குறைக்கு, இங்கிருந்த சிலைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மாயமாகி வருகின்றன. இக்கோவிலில் பிரதிஷ்டை செய்ய, பக்தர்கள் நன்கொடையில் உருவாக்கப்பட்ட ஆஞ்சநேயர் சிலை, லட்சுமி - ஹயக்கிரீவர் சிலை, உற்சவ காலங்களில் பயன்படுத்தும் வாகனங்கள், சப்பரங்கள் ஆகியவை, சமீபத்தில் காணாமல் போன பட்டியலில் இடம் பெற்றுள்ளவை. இங்கு பணியும் ஓர் அர்ச்சகரே, இவற்றை எடுத்துச் சென்று விட்டார் என்பது தான், பக்தர்களின் வேதனை கலந்த குமுறலாகவுள்ளது.
அறநிலையத் துறைக்கு சொந்தமான, கரிவரதராஜ பெருமாள் கோவிலிலிருந்து, எடுத்துச்சென்ற சிலைகள் குறித்து விசாரிக்க, கலெக்டரிடம் பக்தர்கள் புகார் செய்தனர். அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு இதுகுறித்து விசாரிக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து உதவி ஆய்வாளர்கள் இருவர், இது குறித்து பல தரப்பிலும் விசாரணை மேற்கொண்டனர்.
நித்யபூஜையும் நின்றது!
சிலைகளை கோவிலில் ஒப்படைக்கவும், வழக்கம் போல் பூஜைகளை தொடரவும் அறிவுறுத்தினர். ’சரி’ என்று ஒப்புக்கொண்ட கோவில் அர்ச்சகர், சிலைகளை இன்று வரை ஒப்படைக்கவில்லை. பக்தர்கள் அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து மனு கொடுத்து வருகின்றனர். பிரச்னை விஸ்வரூபமெடுப்பதை உணர்ந்த அறநிலையத் துறை அதிகாரிகளும், அர்ச்சகரும் இணைந்து, ’கோவிலிற்கு கும்பாபிஷேகம் நடத்தவேண்டும்’ எனக்கூறி, சில நாட்களுக்கு முன், சுவாமிக்கு பாலாலாயம் செய்தனர். இதனால், கோவிலில் நித்யபூஜைகள் நடப்பது, அதிகாரபூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. அர்ச்சகர் மீது நடவடிக்கை எடுத்து பொருட்களை மீட்காததால், பக்தர்கள் வேதனையடைந்து உள்ளனர்.
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: சுவாமிக்கு சொந்தமான ஒன்பது வாகனங்கள், சரவிளக்குகள், துாண்டா விளக்குகள், தாமிரத்தட்டுக்கள், தாம்பாளம், லட்சுமி - ஹயக்கிரீவர் ஐம்பொன் சிலை, ஆறடி உயரமுள்ள ஆஞ்சநேயர் சிலை, கோவிலில் இருந்த இரும்பு கேட் என ஏராளமான பொருட்களை அர்ச்சகர் எடுத்துச் சென்றுள்ளார். ஆஞ்சநேயர் சிலை பக்தர்களால் உருவாக்கப்பட்டது. மற்ற பொருட்கள் அனைத்தும் அறநிலையத் துறைக்குச் சொந்தமானது. அதன் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். பக்தர்களுக்கு சோதனை வந்தால், கோவிலில் சென்று முறையிடுவர். கோவிலில் முறைகேடு செய்தவர்கள் மீது, புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையே என்று பக்தர்கள் குமுறுகின்றனர். இவர்களின் வேதனைக்கு காலம் தான், விடை சொல்ல வேண்டும்.
சிலைகளுக்கு இல்லை விடுதலை: அறநிலையத்துறை ஆய்வர் உமா மகேஸ்வரி கூறுகையில்,”அர்ச்சகர் நவநீத கிருஷ்ணனிடம் விசாரித்தோம். கோவிலில் இருந்து பூஜைப் பொருட்களையும், சிலைகளையும் எடுத்துச் சென்றதை, மவுனத்தையே பதிலாக தெரிவித்து ஒப்புக்கொண்டார். ஆனால், எடுத்துச் சென்ற பொருட்களையும் சிலைகளையும் திரும்ப ஒப்படைக்க அவருக்கு மனமில்லை,” என்றார். மருதமலை கோவில் துணை கமிஷனர் பழனிக்குமார் கூறுகையில், ”கோவிலில் சிலை வைக்க, அறநிலையத் துறையிடம் அனுமதி பெறவில்லை. அதனால், புதிதாக செய்யப்பட்ட சிலைகள் எங்களது பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால், அந்த சிலைகள் கோவிலில் இருந்து காணாமல் போனது குறித்து, புகார் செய்ய முடியாது. இப்பிரச்னையில் இரு தரப்பும் சமாதானமாக போவதாக கூறியுள்ளனர்,” என்றார். -நமது நிருபர்