பழநியில் ரோப்கார் பராமரிப்பு பணி நிறைவு : எடைக் கற்களுடன் சோதனை ஓட்டம்
பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார் பராமரிப்பு பணி முடிந்து, எட்டு பெட்டிகளில் எடைக் கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடக்கிறது. பழநி மலைக்கோயிலுக்கு மூன்று நிமிடத்தில் செல்லும் வகையில் தினமும் காலை 7:00 முதல் இரவு 9:00 மணி வரை ரோப்கார் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிக்காக மாதத்தில் ஒரு நாளும், ஆண்டுக்கு ஒரு மாதம் வரையும் நிறுத்துவது வழக்கம். ஆண்டு பராமரிப்புக்காக அக்.,5ல் ரோப்கார் நிறுத்தப்பட்டது. கம்பிவடக் கயிறு, கீழ்த்தளம், மேல்தள மோட்டார், பல் சக்கரங்கள், உருளைகளில் ஆயில், கிரீஸ் இடப்பட்டு தேய்ந்த பாகங்கள் புதிதாக மாற்றப்பட்டன. தற்போது பராமரிப்பு பணிமுடிந்துஉள்ளது.நேற்று கம்பிவடக் கயிற்றில் எட்டு பெட்டிகள் பொருத்தப்பட்டு வெறும் பெட்டிகளாக இயக்கப்பட்டன. அதன்பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட அளவு எடைக்கற்கள் வைத்து தொடர்ந்து சோதனை ஓட்டம் நடந்தது. அதில் பக்தர்களின் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்யப்பட்டு, பாதுகாப்பு குழுவினர் சான்றிதழ் வழங்கப்படும். அதன் பின் இரண்டு நாட்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கப்படும் என, கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.