சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் எழுத்தறிவித்தல் விழா!
கோவை : சித்தாபுதூர் ஐயப்ப சுவாமி பொற்கோவிலில், குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் விழா, 6ம் தேதி நடக்கிறது. கோவை சித்தாபுதூரில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி பொற்கோவிலில் நவராத்திரி விழா, செப்.,28 முதல் நடந்து வருகிறது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகளும், மாலையில் அம்மன் சன்னதியில் கலை நிகழ்ச்சிகளும் நடந்து வருகின்றன. நவராத்திரி மகோற்சவத்தின் நிறைவு நாளான விஜயதசமி, நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஐயப்பன் சன்னதியில், சிறு குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். "நாளை 6ம் தேதி வியாழக்கிழமை காலை 7 மணி முதல் சிறு குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் துவங்கும் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். "ஐந்தாயிரம் குழந்தைகளுக்கு மேல் அழைத்து வரப்படுவர் என்பதை கருத்தில் கொண்டு, தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.