உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை நடை பாலம் மூன்றே நாளில் அமைப்பு

சபரிமலை நடை பாலம் மூன்றே நாளில் அமைப்பு

சபரிமலை : பக்தர்களின் வசதிக்காக சபரிமலை சன்னிதானத்தில் ஒரு வழிபாதையில் மூன்றே நாட்களில் ராணுவத்தினர் நடை பாலம் அமைத்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக நாட்டின் பல மாநிலங்களில் இருந்தும் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். இவ்வாறு பக்தர்கள் காத்திருக்கும் கால அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மேலும், உணவு, ஓய்வு, இயற்கை உபாதை போன்றவற்றை நிறைவேற்ற முடியாமல் அவதிப்படுவதும் அதிகரித்து வருகிறது. இவற்றை கருத்தில் கொண்டு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சன்னிதானம் அருகே மாளிகைப்புறத்தம்மன் கோவில் பகுதியில் இருந்து பஸ்மக்குளம் பின்புறம் வழியாக சந்திராயன் சாலையை அடையும் வகையில் 90 மீட்டர் நீளமும், மூன்று மீட்டர் அகலமும் கொண்ட பாலம் அமைக்க உத்தேசிக்கப்பட்டது. இதற்கான பணிகளை விரைவாக, மண்டல மற்றும் மகரஜோதி உற்சவம் துவங்குவதற்கு முன்பாக அமைத்திடவும், அப்பணிகளை முடிக்க ராணுவத்தின் பொறியியல் பிரிவின் உதவியை கோரவும் முடிவு செய்யப்பட்டது. இதை அடுத்து ராணுவத்தினரின் உதவியோடு அப்பகுதியில் பாலம் அமைக்கும் பணிக்காக மெட்ராஸ் இன்ஜினியரிங் பிரிவைச் சேர்ந்த 40 பேர் கொண்ட குழு சபரிமலை வந்தனர். அவர்கள் மூன்றே நாளில் பாலத்தை அமைத்து விட்டனர். பெங்களூரில் இருந்து பிரிகேடியர் குர்தீப் சிங் வரும் 10ம் தேதி சபரிமலையில் பாலப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பாலப்பணிகள் முடிந்து விட்டாலும், இணைப்புச் சாலை பணிகள் துவங்கவே இல்லை. இதனால் பாலம் திறப்படுவது தள்ளிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !