சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தயார்: கேரள அரசு திடீர் முடிவு
புதுடில்லி: சபரிமலை கோவிலில், பெண்களுக்கு அனுமதி மறுப்பது குறித்த வழக்கில், திடீர் திருப்பமாக, பெண்களையும் அனுமதிக்கலாம் என, கேரளாவில் ஆளும், இடதுசாரி ஜனநாயக முன்னணி அரசு, சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ளது, பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில். இந்த கோவிலுக்குள் செல்ல, 10 முதல், 50 வயது வரையுள்ள பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது.
மாற்றக்கூடாது: இந்த வழக்கில், 2007ல் அளித்த பதிலில், பெண்களையும் அனுமதிக்கலாம் என, அப்போது ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தெரிவித்திருந்தது.ஆனால், அதைத் தொடர்ந்து ஆட்சி அமைத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு, கோவிலின் பாரம்பரிய நடைமுறையை மாற்றக் கூடாது; பெண்களை அனுமதிக்கக் கூடாது என, பதில் அளித்தது. இந்நிலையில், கேரளாவில், மார்க்சிஸ்ட் மூத்த தலைவரும், முதல்வருமான பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, இந்தாண்டு மே மாதம் பதவியேற்றது. ஜூலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என, கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி, அசோக் பூஷண் அமர்வுமுன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சபரிமலை கோவிலில் பெண்களையும் அனுமதிக்கலாம் என, 2007ல் தாக்கல் செய்த பதில் மனுவையே, அரசின் பதிலாக எடுத்துக் கொள்ள வேண்டும் என, கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைப்பு: சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும், திருவாங்கூர் தேவசம் போர்டு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், கே.கே.வேணுகோபால், மாநில அரசு அவ்வப்போது தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதை ஏற்கக் கூடாது, என, வாதிட்டார். அதை ஏற்ற சுப்ரீம் கோர்ட் அமர்வு, வழக்கின் விசாரணையை, அடுத்த ஆண்டு, பிப்ரவரி, 13ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
கடும் எதிர்ப்பு: சபரிமலை கோவில் விவகாரம் தொடர்பாக, 10 ஆண்டுகளாக, திருவாங்கூர் தேவசம் போர்டு, கேரள அரசுக்கு இடையே எந்தக் கருத்து மோதலும் ஏற்பட்டதில்லை. தற்போது,பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற நிலைப்பாட்டை மாநில அரசு எடுத்துள்ள நிலையில், தேவசம் போர்டு, அதை கடுமையாக எதிர்த்துள்ளது. தேவசம் போர்டுக்கும், மாநில அரசுக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என, தேவசம் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறி வருகிறார். ஆனால், மாநில அரசின் நிலைப்பாட்டுக்கு, தேவசம் போர்டின் தலைவர் கோபாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். இதற்கிடையே, இந்த வழக்கில், தங்களையும் ஒரு வாதியாக சேர்க்கக் கோரி, சபரிமலை தந்திரியின் பேரனும், அய்யப்பா தர்மசேனா அமைப்பின் தலைவருமான ராகுல் ஈஸ்வர், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கோவிலின் புனிதத் தன்மையை பராமரிக்கும் வகையில், பெண்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கிடையாது: சபரிமலை கோவில் சீசன், ஒவ்வொரு ஆண்டும், கார்த்திகை மாதத்தில் துவங்கி, தை மாதம் வரை நடக்கும்; அதன்படி, நவம்பர், 16ல், இந்த ஆண்டு சீசன் துவங்குகிறது. வழக்கின் விசாரணை, அடுத்த ஆண்டு, பிப்ரவரிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை, தற்போதுள்ள நடைமுறையே இருக்கும். அதன்படி, இந்த ஆண்டு சபரிமலை சீசனில், பெண்கள் செல்ல முடியாது.