ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ உச்சரிப்புடன் குழந்தைகளுக்கு வித்யாரம்பம்!
கோவை : "ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ என்ற உச்சரிப்புடன் பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் ஆவலுடன் நேற்று வித்யாரம்பம் செய்தனர். விஜயதசமி தினமான நேற்று கோவையின் பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்பட்டன. நவராத்திரியின் நிறைவு நாளான விஜயதசமியில், குழந்தைகள் நன்கு படித்து கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற பக்தியுடன், அந்நாளில் எழுத்தாணிப்பால் எனப்படும் வித்யாரம்பம் செய்யப்படுகிறது. தேன் தடவிய தங்கக் கம்பியை குழந்தையின் நாவில் ஓம் என்று எழுதியபின், மடியில் அமரவைத்து பச்சரிசி பரப்பிய ஒரு தட்டில் குழந்தையின் கையில் ஒரு மஞ்சள் துண்டு கொடுத்து, குழந்தையின் கையைப்பிடித்து ஓம் ஹரி; ஸ்ரீகணபதயே நமஹ என, எழுதி அகர வரிசைசயில் எழுதவும், உச்சரிக்கவும் வைப்பது வித்யாரம்பம். ஈச்சனாரியில் உள்ள மகாலட்சுமி மந்திரில் சரஸ்வதிக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்பட்டது. சித்தாபுதூர், ராமநாதபுரத்தில் உள்ள ஐயப்பன் சுவாமி கோவில்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்தனர். சலிவன் வீதி, மாரண்ணகவுடர் பள்ளி வளாகத்திலுள்ள ஸ்ரீ சத்யநாராயண சுவாமி திருக்கோவிலில் 130 குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்பட்டது. பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரத்தில் உள்ள திருமூர்த்தி கோவில் வளாகத்தில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யப்பட்டு, குழந்தைகளால் ஹரி ஸ்ரீ கணபதியே நமஹ என, உச்சரிக்கப்பட்டது. ராஜவீதி-உப்பார வீதி ஈஸ்வரன் கோவிலில் எழுத்தாணிப்பால் விழா துவங்கி, நால்வர் பெருமக்களின் தேவாரம், திருவாசக பாடல்கள் குழந்தைகளால் பாடவைக்கப்பட்டன.