குலசை முத்தாரம்மன் தசரா விழா கோலாகலம்!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில், நெல்லை பாளையங்கோட்டை தசரா திருவிழாவையொட்டி, பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று காலை சப்பர பவனியும் நாளை சூரசம்ஹாரமும் நடக்கிறது.
மைசூருக்கு அடுத்தபடியாக குலசை முத்தாரம்மன் கோயில் தசரா சிறப்பு வாய்ந்தது. ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி பத்து நாட்கள் இத்திருவிழா நடக்கிறது. இந்தாண்டிற்காக திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடன்பிரச்னை தீர, திருமணத்தடை, காரியத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிட்ட, செல்வம் பெருக, குடும்பத்தில் அமைதி நிலவ, தொழில் விருத்தியடைய, எதிலும் வெற்றிகிட்ட போன்ற பல்வேறு வேண்டுதல்களுக்காக, பக்தர்கள் வேடங்களை அணிவது இத்திருவிழாவின் தனிச்சிறப்பு. இதற்காக, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர் குழுவினர், விரதமிருந்து மாலையணிந்து வேடமணிந்தனர். சிவன், கிருஷ்ணர் உள்ளிட்ட சுவாமிகள், பார்வதி,காளி அம்பாள்கள், அரக்கன், ராஜா, ராணி, போலீஸ், நர்ஸ், பிச்சை எடுப்பவர், மனநிலை பாதிக்கப்பட்டவர், குறவன்-குறத்தி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்த இவர்கள், கிராமம் கிராமமாக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை பிரித்தனர். நவராத்திரியின் பத்தாம் நாளான நேற்று இவர்கள், முத்தாரம்மன் கோயிலைச் சேர்ந்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். குலசையில் சூரனை, முத்தாரம்மன் வதம் செய்யும் "மகிஷாசூரசம்ஹாரம் இன்று நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடக்கிறது. திரளான பக்தர்கள குவிந்துள்ளனர். பாளையில் இன்று இரவு சப்பர பவனியும் நாளை ( வெள்ளிக்கிழமை) மாரியம்மன் கோயிலில் சூரசம்ஹாரமும் நடக்கிறது.