உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.14 லட்சத்தில் திருப்பணிகள்

திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் ரூ.14 லட்சத்தில் திருப்பணிகள்

திருவிடந்தை: திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், தொல்லியல், அறநிலைய ஆகிய துறைகளின் சார்பில், 14.10 லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், நித்ய கல்யாண பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ தலங்களில், 62ம் தலமாக விளங்கும் இக்கோவிலில், மூலவர் ஆதிவராக பெருமாள், அகிலவல்லி தாயாருடனும், உற்சவர் நித்ய கல்யாண பெருமாள் கோமளவல்லி தாயாருடனும் வீற்று, பக்தர்களுக்கு அருள்புரிகின்றனர். திருமணம், மகப்பேறு உள்ளிட்ட தோஷங்களுக்கு, பரிகார தலமாக விளங்கும் இக்கோவிலை, வழிபாட்டின் அடிப்படையில், தமிழக இந்து சமய அறநிலையத்துறையும், பாரம்பரிய பழமை கோவில் அடிப்படையில், இந்திய தொல்லியல் துறையும் நிர்வகித்து வருகின்றன. அறநிலையத்துறை சார்பில், 2006ம் ஆண்டு, திருப்பணி செய்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது; 2018ல் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். இந்நிலையில், 2014ம் ஆண்டு இறுதியில், தொல்லியல் துறை சார்பில், ரசாயன பூச்சு மூலம், கோவில் துாய்மைப்படுத்தப்பட்டு, சில சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.

பாலாலயம்: அப்பணிகளை திருப்பணியாக கருதி, அதே ஆண்டு டிசம்பர் மாதம், பாலாலயம் செய்யப்பட்டது. இது ஒருபுறமிருக்க, கோவில் மகா மண்டப தென் பகுதி மேல் தளத்தில், தாங்கு கல் துண்டாகி, கீழே விழும் ஆபத்து ஏற்பட்டது. தொல்லியல் துறை, அதையும் அகற்றி, புதிய தாங்கு கல் அமைத்து, மேல்தள எடை குறைக்க, அதன் உயரத்தையும் குறைத்து சீரமைத்தது. மகா மண்டப கான்கிரீட் தரையை அகற்றி, கருங்கல் பதிக்க, தொல்லியல் துறையிடம், அறநிலையத்துறை வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அத்துறை, 10.73 லட்சம் ரூபாய் மதிப்பில், பணியை மேற்கொள்ள ஒப்பந்தம் கோரியுள்ளது. அறநிலையத்துறையும், கோவிலின், திருமண தீர்த்த குள சுற்றுச்சுவரில், சேத பகுதியை, 3.38 லட்சம் ரூபாய் மதிப்பில் மீண்டும் அமைக்க, ஒப்பந்தம் கோரியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !