உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சரண கோஷத்துடன் மாலையணிந்த பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் கோலாகலம்!

சரண கோஷத்துடன் மாலையணிந்த பக்தர்கள் ஐயப்பன் கோவிலில் கோலாகலம்!

திருப்பூர்: கார்த்திகை முதல் நாளான நேற்று, ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை துவக்கினர். திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில், 4 ஆயிரம் பக்தர்கள் மாலை அணிந்தனர். கார்த்திகை முதல் நாளான நேற்று, மண்டல பூஜைக்காக, சபரிமலை ஸ்ரீ ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. கார்த்திகை முதல் நாளில், ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து, விரதத்தை துவக்குவது வழக்கம். அவ்வகையில், திருப்பூர் காலேஜ் ரோடு ஐயப்பன் கோவிலில், பக்தர்கள் நேற்று, மாலை அணிந்து கொண்டனர். நேற்று காலை, 4:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. 5:30க்கு, நெய், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர், பால், தயிர், இளநீர், விபூதி, புஷ்பம் கொண்டு, அஷ்டாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சி நடந்தது. தாமோதரன் நம்பூதிரி தலைமையில், குருசாமி கள், "சுவாமியே சரணம் ஐயப்பா கோஷம் என்று முழக்கங்களுடன், குழந்தைகள், கன்னி சாமிகள் என, நான்காயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மாலை அணிந்து கொண்டனர்.

திருப்பூர், அவிநாசி, பல்லடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள, ஐயப்பன் கோவில்கள் மற்றும் விநாயகர் கோவில்கள், சிவன் கோவில்களில், நூற்றுக்கணக்கானவர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். ஐயப்பன் கோவில் சீசன் துவங்கியுள்ளதால், காவி, கறுப்புநிற வேஷ்டிகள், துண்டுகள், துளசி மாலைகள் விற்பனை களை கட்டியுள்ளது.

நாளை கொடியேற்றம்: ஸ்ரீ ஐயப்பன் கோவில் மண்டல பூஜை கொடியேற்றம், நாளை, மாலை, 6:00க்கு, சபரிமலை தந்திரி மோகனரு தலைமையில், கோவிலில் நடக்கிறது. 19ம் தேதி காலை, 10:00 மணிக்கு, நவ கலச அபிஷேகம், 108 வலம்புரி சங்கு அபிஷேகம் நடக்கிறது. 20ல், பகவதி சேவை; 21ல், நவகலச அபிஷேகம், உற்சவ பலி பூஜை, தாயம்பகை மேளம்; 22ல், பள்ளி வேட்டை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, சுவாமி ஆறாட்டு மற்றும் திருவீதி உலா, வரும், 23ல் நடக்கிறது. பவானி கூடுதுறைக்கு பதிலாக இம்முறை, ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில், புண்ணிய நதிகளின் தீர்தங்கள் கொண்டு வரப்பட்டு, குளத்தில் ஆறாட்டு உற்சவம், காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. மகேஸ்வரன் தந்திரி, கண்டரு மோகனரு தலைமையில், பெருமாள் கோவிலில், ஆறாட்டு விழா நடக்கிறது. மாலை, 6:00க்கு, சுவாமி ஸ்ரீ ஐயப்பன், ரதத்தில் எழுந்தருள்கிறார். ஈஸ்வரன் கோவிலில் துவங்கும் ஊர்வலம், ரயில்வே மேம்பாலம் வழியாக, ஐயப்பன் கோவில் வருகிறது.

புதிய தேர்வெள்ளோட்டம்:
தர்ம சாஸ்தா டிரஸ்ட் சார்பில், ஐயப்ப சுவாமி திருவீதி உலாவுக்கு, புதிதாக தேர் செய்யப்பட்டுள்ளது. வேங்கை மரத்தில், 3.5 டன் எடையில், இது தயாரிக்கப்பட்டுள்ளது. 12.25 அடி உயரம், ஏழரை அடி நீளம், நான்கரை அடி அகலத்தில், ஐயப்பன், விநாயகர், விஷ்ணு, சிவன், முருகன், அம்மன், லட்சுமி, சரஸ்வதி வீற்றிருக்க, 28 யானைகள், குதிரை மற்றும் பல்வேறு சுதை வேலைப்பாடுகளுடன், அழகாக ரதம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை, 9:00 முதல், 10:30 மணிக்குள், வெள்ளோட்டம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !