நெல்லிக்குப்பத்தில் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிப்பு
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் சபரிமலைக்கு செல்ல ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்தனர். கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்ல கார்த்திகை மாதம் முதல் தேதி பக்தர்கள் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து கோவிலுக்கு சென்று ஐயப்பனை தரிசிப்பது வழக்கம். நேற்று கார்த்திகை மாதம் முதல் தேதி அருள் தரும் ஐயப்பன் கோவிலில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
குருசாமிகள் ராதா, துரைராஜ் ஆகியோர் பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர். மதியம் முருகன் அன்னதானம் வழங்கினார். நேற்று முதல் மார்கழி மாதம் 30ம் தேதி வரை தொடர்ந்து 60 நாட்கள் மதியம் அன்னதானம் வழங்குகின்றனர். வரசித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு குருசாமி துளசிதாஸ் பக்தர்களுக்கு மாலை அணிவித்தார்.
சிதம்பரம்: கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் அதிகாலை ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் அதிகாலை முதல் மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசனம் செய்துவிட்டு, மாலை அணிவிக்க காணிக்கை செலுத்தி, கோவில் பூசாரியிடம் ஐயப்ப மாலை அணிந்தனர். கார்த்திகை முதல் நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். அதேப்போன்று அண்ணாமலை நகரில் உள்ள ஐயப்பன் கோவிலிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்துகொண்டனர்.