திறக்கப்படாத உண்டியல் வீணாகிறது காணிக்கை
திருப்பூர் : தாராபுரம் காடு அனுமந்தராய சுவாமி கோவிலில், இரண்டரை ஆண்டுகளாக உண்டியல் திறக்கப்படாதது, பக்தர்களை கவலையடைய செய்துள்ளது; உண்டியலை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தாராபுரத்தில், ஆயிரம் ஆண்டு பழமையான, காடு அனுமந்தராய சுவாமி கோவில் உள்ளது. கோவிலின் பழைய அறங்காவலர்கள் பதவி முடிந்ததும், முறையாக கோவில் உண்டியல்களின் சாவியை ஒப்படைக்காததால், பணம் எண்ணப்படாமல் உள்ளது. இரண்டரை ஆண்டுகளாக, பல லட்சம் ரூபாய் உண்டியல்களிலேயே தேங்கி வீணாகி வருகிறது. ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள், தங்கம், வெள்ளி பொருட்கள் என்ன நிலையில் உள்ளது என்றே தெரிவியவில்லை. தற்போது, 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாததாக அறிவிக்கப்பட்டுள்ளதால், டிச.,30க்குள், உண்டியலை திறக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, உண்டியல் திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில், "அதிகாரிகளிடம் பொறுப்புகள் மற்றும் உண்டியல் சாவியை ஒப்படைக்கவில்லை. இதனால், இரண்டரை ஆண்டுகளாக, உண்டியல் திறக்கப்படவில்லை. உயர் அதிகாரிகளின் அறிவுரை பெற்று, உண்டியல்களை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.