கார்த்திகை தீபத்திருநாள் விழா: அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை பகுதியில், கார்த்திகை தீபத்திருநாள் விழா முன்னிட்டு, அகல் விளக்கு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். கிருஷ்ணராயபுரம் தாலுகா, லாலாப்பேட்டை கொடிக்கால் தெருவில், மண்பாண்ட தொழிலாளர்கள், குடிசை தொழிலாக பானை, அகல் விளக்கு உள்ளிட்ட வற்றை தயாரித்து வருகின்றனர். வரும் கார்த்திகை தீபத்திருநாள் முன்னிட்டு, கோவில், வீடுகளில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அதனால், தற்போது விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுகுறித்து, தொழிலாளி வேளார் கூறியதாவது: நாங்கள் தயாரிக்கும் அகல், சுட்டி, ஐந்து முகம் போன்ற விளக்குகள், அதன் வடிவத்துக்கு ஏற்ப விலை நிர்ணயத்து தயாரித்து விற்கிறோம். சில்லரை விற்பனையிலும், மொத்தமாக ஆர்டர் கொடுப்பவருக்கும், தயாரிக்கிறோம். நாளடைவில் இந்த தொழிலில் ஆர்வம் குறைந்து வருவதால், ஓரளவு கிடைக்கும் வருமானத்தை கொண்டு, எங்கள் தலைமுறையினர் மண்பாண்ட தொழில் ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.