கிழவன்கோயிலில் மழை வேண்டி சமாராதணை வழிபாடு!
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு அருகே கிழவன்கோயிலில் மழைவேண்டி சமாராதணை வழிபாடு நடந்தது. வத்திராயிருப்பு அருகே பிளவக்கல் அணையை ஒட்டியுள்ளது கிழவன் கோயில். இங்கு மூலவராக எழுந்தருளிய தர்மசாஸ்தா, துாங்காலக்கிழவனார் வடிவில் அருள்பாலிக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் மழைவேண்டி இவருக்கு சமாராதணை விழா நடக்கும். இந்த ஆண்டுவிழா, வத்திராயிருப்பு நடுஅக்ரஹாரம் பஜனை மடத்தில் ஆவாஹன பூஜைகளுடன் துவங்கியது. பக்தர்கள் எடுக்க வேண்டிய பால்குடங்களுக்கு அதிகாலையில் ஆவாஹன பூஜைகள் செய்யப்பட்டது. பூஜிக்கப்பட்ட பால்குடங்களை பக்தர்கள் சுமந்தபடி வீதியுலா சென்றனர். பின்னர் 15 கி.மீ. துாரமுள்ள கிழவனார் கோயிலுக்கு பால்குடங்களுடன் நடந்து சென்றனர். கோயிலில் பால்குடங்களுக்கு மீண்டும் பூஜைகள் நடந்தது. சாஸ்தா, பேச்சியம்மன், கருப்பசாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள், பஜனை வழிபாடு நடந்தன. பின்னர் அருள்வாக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தன. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். இந்து ஹைஸ்கூல் சத்திரம் கமிட்டி நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர்.