தி.மலையில் மஹா தீபம் ஏற்ற 200 கிலோ செப்பு கொப்பரை தயாராகிறது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், மஹா தீபம் ஏற்ற, 200 கிலோ எடையுள்ள செப்பு கொப்பரை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு தீப திருவிழா நவ., 30ல் துவங்குகிறது. டிச., 3ல் கொடியேற்றம் நடக்கிறது. டிச., 12ல், 2,668 அடி உயர மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழா அன்று ஏற்றப்படும் தீபம், தொடர்ந்து, 11 நாட்களுக்கு எரியும். திருவண்ணாமலையை சுற்றி, 40 கி.மீ., துாரம் வரை, இந்த தீபம் தெரியும். மஹா தீபம் ஏற்ற, 5 அடி உயரம், 40 அங்குலம் விட்டமுள்ள கொப்பரை பயன்படுத்துவது வழக்கம். கடந்த, 13 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்த கொப்பரை, தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்நிலையில், புதிய கொப்பரையை செய்து தர, பாரத ஸ்டேட் வங்கி முன் வந்தது. இதற்காக, வழக்கமாக கொப்பரை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அண்ணாமலை நாட்டார், 70, என்பவரிடம் பணி ஒப்படைக்கப்பட்டு உள்ளது. கொப்பரை, 200 கிலோ அளவில் செப்பு தகடால் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கொப்பரையில், 1,000 மீட்டர் காடா துணி, 3,500 கிலோ நெய் பயன்படுத்தி, கார்த்திகை தீபத்தன்று மஹா தீபம் ஏற்றப்படும்.