பழமை வாய்ந்த பவானி அம்மன் கோவில் கருவறைக்குள் 7 அடி நீள சாரைப்பாம்பு!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, கோவில் கருவறைக்குள், ஏழு அடி நீள சாரைப்பாம்பு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த அக்ரஹாரம் கிராமத்தில், பழமை வாய்ந்த பவானி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரியாக இருப்பவர் ராமமூர்த்தி. இவர் நேற்று மாலை, 6:00 மணிக்கு பூஜை செய்ய கோவிலுக்கு சென்றார். அப்போது, கோவில் கருவறையில் ஒரு பாம்பு இருந்தை பார்த்தார். அதிர்ச்சியைடைந்த அவர் உடனடியாக கோவிலை விட்டு வெளியே ஓடிவந்து, ஊர் பொதுமக்களிடம் கூறினார். இதையடுத்து, ஏராளமானோர் கோவில் முன்பு கூடினர். இது குறித்து, கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனச்சரக அலுவலர் நாகேஷ் உத்தரவின் படி, பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற வன ஊழியரான கணபதி அங்கு வந்தார். அவர் கோவில் கருவறையில் இருந்த, ஏழு அடி நீள சாரைப்பாம்பை பிடித்தார். பின் அதை வனத்தில் விட்டனர். கோவில் கருவறைக்குள் பாம்பு இருந்தது சம்பவம் அப்பகுதியில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.