துர்கா பூஜை விழா கோலாகலம்
குன்னூர் : அருவங்காடில் நடந்து வரும் துர்கா பூஜை விழாவின் நிறைவாக துர்கையை கங்கையில் கரைக்கும் நிகழ்ச்சி நடந்தது.நீலகிரி சர்போஜன் சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் துர்கா பூஜை விழா அருவங்காட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. சங்கத்தின் பொன் விழா ஆண்டு விழாவாக இந்தாண்டைய விழா கடந்த 2ம் தேதி துவங்கியது. துர்கையம்மன் சிலை பிரத்யேகமாக இருக்க, லட்சுமி, சரஸ்வதி உட்பட தெய்வங்களின் சிலைகள் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டிருந்தன.நிகழ்ச்சியை, அருவங்காடு கார்டைட் தொழிற்சாலை பொது மேலாளர் அ÷ஷாக்குமார் துவக்கி வைத்தார். ஊட்டி ராமகிருஷ்ணா மடத்தின் சுவாமி சுகத்மானந்தா மகராஜ், ஆன்மிக உரையாற்றினார். தினமும் காலை, மாலை நேரங்களில் சிறப்பு வழிபாடு, பஜனை நடந்தது. இறுதி நாளில் துர்கை உட்பட தெய்வங்களின் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஏரியில் கரைக்கப்பட்டது. விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.