தில்லைக்காளி கோவில் உண்டியலில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்!
சிதம்பரம்: சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவில் உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. சிதம்பரம் தில்லைக் காளியம்மன் கோவில் வளாகத்தில் உள்ள 5 உண்டியல்கள் செயல் அலுவலர் முருகன் முன்னிலையில் திறக்கப்பட்டது. ஆய்வாளர்கள் சிதம்பரம் ராமநாதன், காட்டுமன்னார்கோவில் சீனிவாசன் மேற்பார்வையில் வங்கி அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில், 500 ரூபாய் நோட்டுகள் 4 கட்டுகளும், 1000 ரூபாய் நோட்டுகள் 82 என மொத்தம் 3 லட்சத்து 4,500 ரூபாய் இருந்தது. அனைத்து உண்டியல்களிலும் சேர்த்து மொத்த காணிக்கையாக 5 லட்சத்து 14 ஆயிரத்து 841 ரூபாய், 6 கிராம் தங்கம், 155 கிராம் வெள்ளி பொருள்கள், வெளிநாட்டு கரன்சிகள் அமெரிக்கா டாலர் 13, சவுதி ரியால் 1 என மொத்தம் 14 கரன்சிகள் இருந்தன. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்கள் சரிபார்த்து சிதம்பரம் கடலுார் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் டிபாசிட்டாக செலுத்தப்பட்டது.