பாலாற்றில் கிடைத்த வெள்ளி காசுகள் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை
வேலுார்: பாலாற்றில் கிடைத்த வெள்ளி காசுகள், 250 ஆண்டுகள் பழமை வாய்ந்தது, என, அரசு அருங்காட்சியக அதிகாரி சரவணன் கூறினார். வேலுார் மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே, சிறுகரும்பூர் பாலாற்றில், நவ., 26ல், மணல் அள்ளிய போது, வெள்ளி காசு புதையல் கிடைத்துள்ளது. இதை யாருக்கும் தெரியாமல், மணல் அள்ளிய தொழிலாளர் கள், பிரித்து கொண்டனர்.தகவல் அறிந்த நெமிலி தாசில்தார் இளஞ்செழியன், போலீசார் உதவியுடன், சிறுகரும்பூர் கிராமத்திற்கு சென்று, ஏழு பேர் வீடுகளை சோதனை செய்து, 206 வெள்ளி காசுகளை பறிமுதல் செய்தார். காவேரிப்பாக்கம் போலீசார், அரசுக்கு சொந்தமான வெள்ளி காசுகளை பதுக்கி வைத்திருந்த, ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர். வேலுார், அரசு அருங்காட்சியக காப்பாட்சியாளர் சரவணன், நிருபர்களிடம் கூறியதாவது:வெள்ளி காசுகள், 250 ஆண்டு களுக்கு முந்தைய, 18ம் நுாற்றாண்டைச் சேர்ந்த ஆற்காடு நவாப் கால காசுகளாகும். நாணயத்தில் பாரசீக மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. காசுகள் ஒவ்வொன்றும், 11.35 கிராம் முதல், 11.53 கிராம் எடையில் உள்ளன. காசுகள், சென்னை அரசு அருங்காட்சியக இயக்குனரிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.பாலாற்றில் இருந்து, நுாற்றுக்கணக்கான வெள்ளி காசுகளை பலரும் எடுத்து, அடகு கடைகளில் வைத்து, வெள்ளி கொலுசு மற்றும் தங்க நகை வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.இதனால், காவேரிப்பாக்கம் போலீசார், வெள்ளி காசுகளை நகை கடைகளில், அடகு வைத்தவர்கள் பட்டியலை வாங்கி, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.