சபரிமலை அபிவிருத்திக்கு ரூ.150 கோடி திட்டம் அரசுக்கு பரிந்துரைக்க முடிவு
சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக 150 கோடி ரூபாய் செலவிலான வரைவு திட்டம் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்ப உயர் அதிகார கமிட்டி முடிவு செய்துள்ளது.
சபரிமலையில் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் உயர் அதிகார கமிட்டியின் பரிந்துரை படி நடக்கிறது. இதன் தலைவராக முன்னாள் தலைமை செயலாளர் ஜெயக்குமார் உள்ளார். சபரிமலை மாஸ்டர் பிளான் இந்த இந்த கமிட்டியின் மேற்பார்வையில்தான் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த சீசனுக்குள் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் தொடர்பாக 150 கோடி ரூபாய் செலவில் ஒரு வரைவு திட்டத்தை இந்த கமிட்டி தயாரித்துள்ளது.
சன்னிதானத்தின் முன்புறம் உள்ள பெரிய நடைப்பந்தலில் தற்போதுள்ள சிமின்ட் ஷீட் கட்டிடத்தை மாற்றி விட்டு கான்கரீட் கட்டிடம் கட்டி 3500 பக்கள் தங்கும் வசதி, இந்த ஆண்டு திறக்கப்பட்ட இரண்டாயிரம் பேர் அமந்து சாப்பிடும் அன்னதான மண்டபத்தை ஐந்தாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் மூன்று மாடி கட்டிடமாக மாற்றுவது, பாண்டி தாவளத்தில் எட்டாயிரம் பேர் தங்கும் வசதியில் கட்டிடம் போன்றவற்றுக்கு இந்த வரைவு திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த திட்டம் அனுமதி கிடைத்ததும் உயர் அதிகார கமிட்டி கூடி டெண்டர் விடுவதற்கான பணிகள் தொடங்கும். நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவு பெற்றதும் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.