விரிஞ்சிபுரம் கோவிலில் சிம்மக்குளம் திறப்பு: புனித நீராடிய பெண்கள்
வேலூர்: விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில், கடை ஞாயிறு முன்னிட்டு சிம்மக்குளம் திறக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் புனித நீராடினர். வேலூர் அருகே, விரிஞ்சிபுரத்தில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி ஞாயிறு அன்று, சிம்மக்குளம் திறப்பு விழா வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கோவிலில் உள்ள சூளி தீர்த்தம், சோம தீர்த்தத்தில் புனித நீராடினால், பேய், பிசாசு, பில்லி சூனியம், வலிப்பு, தீவினைகள் அனைத்தும் விலகி விடும் என்பது ஐதீகம். அதேபோல், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண்கள் சிம்ம குளத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம், சிம்ம தீர்த்தத்தில், நள்ளிரவு, 12:00 மணிக்கு நீராடி, ஈரத்துணியுடன் கோவிலில் படுத்து தூங்கினால், அவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும் என்பதும் ஐதீகம். அதன்படி, இந்தாண்டின் கடைசி ஞாயிறு விழா நேற்று நடந்தது. இதையொட்டி, நள்ளிரவு, 12:00 மணிக்கு சிம்மக்குளம் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள் சிம்ம குளத்தை திறந்து வைத்தனர். வேலூர், திருவண்ணாமலை மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்திருந்த, ஆயிரக்கணக்கான பெண்கள் சிம்மக் குளத்தில் நீராடி, வழிபாடு செய்த பின், கோவிலில் படுத்து தூங்கினர். அமைச்சர்கள் ராமச்சந்திரன், வீரமணி, நிலோபர் கபில், அணைக்கட்டு எம்.எல்.ஏ., நந்தகுமார், கலெக்டர் ராமன், எஸ்.பி., பகலவன், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் சிவாஜி, ஆவின் தலைவர் வேலழகன், வேலூர் சப்கலெக்டர் அஜய் சீனிவாசன் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று காலை, 6:30 மணிக்கு, பிரம்மகுளத்தில் தீர்த்த வாரி நடந்தது. விழாவையொட்டி சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.