உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதி இல்லை

கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வசதி இல்லை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவில் மாட வீதிகளில், வெளி மாநில பக்தர்களால், அசுத்தமும் சுகாதாரமற்ற நிலையும் ஏற்படுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். காஞ்சிபுரத்தில் சிறப்பு பெற்று விளங்கும் வரதராஜப்பெருமாள் கோவிலுக்கு பல மாநிலங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததாலும், தங்குவதற்கு வசதியான இடங்கள் கிடைக்காததாலும், கோவிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் வாகனங்களை நிறுத்துகின்றனர். அந்த இடத்திலே சமைத்து, சாப்பிட்டு, அங்கேயே கழிவுகளையும் இட்டுச் செல்கின்றனர். அவர்களில் பலர், பேருந்தை சுற்றி, சகல விதமான அசுத்தங்களையும் செய்வதால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

வாகன நிறுத்தம் அவசியம்: வெளி மாநிலத்தில் இருந்து வரும் பேருந்துகள், காஞ்சிபுரம் கோவில் அருகில் தான் நிறுத்தப்படுகின்றன. வாகனங்கள் நிறுத்த தனி இடம் ஏற்படுத்த வேண்டும். அங்கிருந்து கோவிலுக்கு செல்ல வாகன வசதிகள் உள்ளன. அதே போல் வெளி மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள், தங்க போதிய வசதி இல்லாமல் பலர் வாகனங்களில் தங்கிச் செல்கின்றனர். அதற்கு குறைந்த கட்டணத்தினாலான தங்கும் விடுதிகள் அமைத்தால் நகராட்சி அல்லது கோவிலுக்கு வருவாயும் கிடைக்கும். பக்தர்களுக்கு வசதியாகவும் இருக்கும்; வருகையும் அதிகரிக்கும்.

சுத்தத்திற்கு என்ன வழி: வெளி மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்கள் சமைக்க, தனி இடம் இருந்தால் அவர்கள் அங்கு சமைத்து சாப்பிட்டு கோவிலுக்கு வருவர். இது போல் கோவில் அருகில் சமைக்க வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், பக்தர்கள் குளிக்க மற்றும் கழிப்பறை வசதி பெயரளவிற்கு இருக்கிறது. அதுவும் கட்டண கழிப்பறை என்பதால், வெளி மாநிலத்தவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக ஏற்கனவே புகார் எழுந்துள்ளது. இதனால் பலர் அவர்கள் நிறுத்தும் வாகனம் அருகில், சிறுநீர் கழிக்கின்றனர். கோவில் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க, கோவில் நிர்வாகம், நகராட்சி கண்காணிப்பு ஏற்பாடு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !